‛‛காப்பாத்துங்க சார்’’.. விஜயின் காலில் விழுந்து கதறிய பெண்.. கண்கலங்கிய தவெக தலைவர் - பெரும் சோகம்
கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சியில் சிகிச்சை பெற்று வருவோரை நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த வேளையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவரை காப்பாத்துங்க சார் என பெண் ஒருவர் நடிகர் விஜயின் காலில் விழுந்து கதறி அழுத நிலையில் அவர் கண்கலங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 100க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வாந்தி, மயக்கம், வயிற்றெச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளால் ஆண்கள், பெண்கள் என்று இருதரப்பினரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.

இதில் பெண்களை விட ஆண்களே அதிகம். இவர்களுக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை உள்பட பிற மருத்துவமனைகளில் சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பலி ஏற்பட்டு வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது வரை 42 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் அபாயகரமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. அதேபோல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது.
இந்நிலையில் தான் கள்ளச்சராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர் மற்றும் இறந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து தலைவர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். இன்று மாலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் கள்ளக்குறிச்சிக்கு சென்றார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை அவர் சந்தித்து நலம் விசாரித்தார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு விஜய் ஆறுதல்கூறினார். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி அவர் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள ஒவ்வொருவரையும் கையெடுத்து கும்பிட்டு விஜய் ஆறுதல் கூறினார். விஜயை பார்த்து அழுத குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார். அப்போது பெண் ஒருவர் திடீரென்று விஜயின் காலில் விழுந்து ‛‛காப்பாத்துங்க சார்'' எனக்கூறி கதறி அழுதார். இதனை சற்றும் எதிர்பார்க்காத விஜய் அவரை கைப்பிடித்து தூக்கிவிட்டு ஆறுதல் கூறினார். அப்போது அந்த பெண் விஜயை கட்டியணைத்து கதறி அழுதார். இதனால் விஜயும் கண்கலங்கிப்போனார். அதேபோல் சிகிச்சை பெற்று வரும் ஒருவர், ‛‛காப்பாத்துங்க தலைவா'' விஜயை பார்த்து கதறி அழுதார். . இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

முன்னதாக நடிகர் விஜய் இந்த சம்பவம் குறித்து தமிழக அரசை குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ‛‛கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், மனவேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுபதாபங்களை தெரிவித்து கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
கடந்த ஆண்டு இதேி நிகழ்வு காரணமாக பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்'' என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications