அக்னி தீர்த்தக்கடலில் மையம் கொண்ட கமல் புயல்... மதுரையில் கரையை கடக்கிறது!
ஒரு வழியாக அரசியலில் குதித்தே விட்டார் கமல்ஹாசன்...ராமேஸ்வரத்தை மையம் கொண்ட கமல் புயல் இன்று மதுரையில் அரசியல் கடலை கடக்கிறது.
Recommended Video

மதுரை: ஐம்பது ஆண்டு காலமாக சினிமா நடிகராக இருந்த கமல்ஹாசன் இன்று முதல் அரசியல் கட்சித்தலைவர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் உருவாகி மையம் கொண்டுள்ள கமல் புயல் மெதுவாக நகர்ந்து மதுரையில் மாலையில் கரையைக் கடக்கிறது.
அரசியலுக்கும் புதனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அரசியல்வாதிகள் பெரும்பாலானவர்கள் 5ஐ ராசி எண்ணாக வைத்திருப்பார்கள். புதன் கிழமை இல்லாவிட்டாலும் புதன் ஓரை பார்த்து அரசியல் நிகழ்வுகளை வைத்துக்கொள்வார்கள். கமல்ஹாசனும் அந்த சென்டிமெண்டிற்கு தப்பவில்லை.
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த புதன்கிழமை நாளில் தனது அரசியல் பயணத்தை புண்ணிய பூமியான ராமேஸ்வத்தில் இருந்து தொடங்கியுள்ளார்.

கமலுக்கு ராசி எண்
கமல் தனது ராசியான எண்ணாக 7ஐ குறிப்பிடுவார். அவர் பிறந்தது நவம்பர் 7. இன்றைய தினம் 21-02-2018 கூட்டிப்பார்த்தால் கூட்டுத் தொகை 7 வருகிறது.

புண்ணிய பூமி
இந்துக்களின் புண்ணிய பூமி ராமேஸ்வரம். இப்போது சர்வ சமயத்தினரின் புண்ணிய பூமியாக போற்றப்படும் தலமாகி விட்டது, காரணம் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏபிஜெ அப்துல் கலாமின் உடல் ரமேஸ்வரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்துல் கலாம் ஆசியுடன் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார் கமல்.

மையம் கொண்ட கமல்
தான் பிறந்த மண்ணான பரமக்குடி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. அந்த சென்டிமெண்ட் படி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் மையம் கொண்ட கமல் புயல், மெதுவாக நகர்ந்து ரசிகர்களை சற்றே பாதித்து மாலையில் மதுரையில் கரையை கடக்கப் போகிறது.

கட்சி, கொடி, சின்னம் அறிவிப்பு
யாதும் ஊரோ யாவரும் கேளீர் என்று கமல் கூறினாலும் சொந்த மண்ணில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள கமல் மாலையில் மதுரை ஒத்தக்கடை பொதுக்கூட்டத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து தனது கட்சிப்பெயரையும் சின்னத்தையும் அறிவிக்கிறார்.

அரசியல் வானில் சூரியனா?
அரசியல் வானில் எத்தனையோ கட்சிகள் உள்ளன. அவற்றில் பல மின்னி மறையும் நட்சத்திரங்களாக மட்டுமே இருக்கின்றன. சினிமா வானில் உச்ச நட்சத்திரம் என்று பெயர் பெற்ற கமல், அரசியல் வானில் எம்ஜிஆரைப் அழிக்க முடியாத சூரியனாக மாறுவாரா?. நாளை நமதே என்று எம்ஜிஆர் பட தலைப்பில் அரசியல் பயணம் தொடங்கியுள்ள கமல்ஹாசனை ஏற்றுக்கொள்வதும், ஒதுக்குவதும் தமிழக மக்களின் கைகளில்தான் இருக்கிறது.












Click it and Unblock the Notifications