4 நாட்களில் அரசியல் கட்சி தொடங்கும் கமல்... சென்னையில் நல்லகண்ணுவுடன் சந்திப்பு!
பிப்ரவரி 21ம் தேதி அரசியல் கட்சி தொடங்க உள்ள நடிகர் கமல்ஹாசன் சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை சந்தித்துள்ளார்.
Recommended Video

சென்னை : பிப்ரவரி 21ம் தேதி அரசியல் கட்சி தொடங்க உள்ள நடிகர் கமல்ஹாசன் சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை சந்தித்துள்ளார். தி நகரில் உள்ள வீட்டில் நல்லகண்ணுவை சந்தித்து அரசியல் குறித்து கமல்ஹாசன் வாழ்த்துகளை பெற்றுள்ளார்.
பிப்ரவரி 21ம் தேதி ராமநாதபுரத்தில் அப்துல்கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கும் நடிகர் கமல்ஹாசன் அன்றைய தினம் தனது கட்சியின் பெயரையும் கொடியையும் அறிவிக்க உள்ளதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மதுரை மாட்டுத்தாவணியில் பொதுக்கூட்டம் நடத்துவதற்காக போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
மக்கள் நலனுக்காக கட்சி தொடங்கப் போவதாக கூறியுள்ள கமல்ஹாசனின் அரசியல் பாதை என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் முக்கிய நபர்களுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்புகளை நடத்தி வருகிறார்.

சேஷன், நல்லகண்ணுவுடன் சந்திப்பு
நேற்றைய தினம் முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனை சந்தித்த கமல் இன்று சென்னை தி. நகரில் உள்ள வீட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணுவை சந்தித்துள்ளார். அவரிடம் தனது அரசியல் பயணத்திற்கு வாழ்த்துகளை பெறுவதோடு சில ஆலோசனைகளை கமல் கேட்டுள்ளார்.

சிறந்த அரசியல்வாதி நல்லகண்ணு
தமிழக அரசியல் வரலாற்றில் மூத்த அரசியல்வாதியான நல்லகண்ணு இன்றளவும் அரசியலில் சிறந்த உதாரணமாக இருந்து வருகிறார். தனக்கென சொத்து சேர்க்காமல் மக்கள் பணியில் மட்டுமே அக்கறை காட்டி வரும் நல்லகண்ணு இன்றைய இளைஞர்களின் உந்துசக்தி அவரை கமல் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மக்கள் சேவகர் நல்லகண்ணு
இதனிடையே சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல், கட்சியைத் தாண்டி மக்களுக்காகவே சேவை செய்து வருபவர் நல்லகண்ணு. மக்களுக்காக சேவை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சந்திப்பேன். எனது மக்கள் பணி சிறக்க வேண்டும் என்பதால் நல்லகண்ணுவை சந்தித்தேன். இடதுசாரி தலைவர்கள் மட்டுமல்ல அனைவரையும் சந்திப்பேன். மதுரையில் 21ம் தேதி நடக்கும் மாநாட்டில் பங்கேற்க நல்லகண்ணுவிற்கு அழைப்பு விடுத்தேன் என்றும் கமல் தெரிவித்தார்.

மரியாதை நிமித்தமாக
கமல்ஹாசன் மரியாதை நிமித்தமாக என்னை சந்தித்ததாக நல்லகண்ணு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கமல் அவருடைய புதிய அரசியல் கட்சி பற்றி எந்த ஆலோசனையும் பெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications