பேசாம அழகிரி ஸ்டைலில் இறங்கிடலாமா... தீவிர ஆலோசனையில் கனிமொழி?
திமுகவில் அழகிரியைத் தொடர்ந்து கனிமொழியும் முக ஸ்டாலினுக்கு எதிராக வெளிப்படையாக இறங்குவாரா என்ற புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தக் கோணத்தில் கனிமொழி தீவிர ஆலோசனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சென்னை: திமுக யார் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும் என்ற அதிகாரப் போட்டியின் அடுத்த அதிரடி காட்சிகள் விரைவில் அரங்கேற இருக்கிறதாம். மு.க. அழகிரி பாணியில் ஸ்டாலினுக்கு எதிராக கலகக் குரல் எழுப்ப ராஜ்யசபா எம்பி கனிமொழி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
திமுகவில் படிப்படியாக கட்சிப் பதவிகளில் முன்னேறியவர் மு.க. ஸ்டாலின். திமுகவில் கருணாநிதிக்குப் பின்னர் ஸ்டாலின்தான் என்ற நிலை திட்டமிட்டே உருவாக்கப்பட்டது.
இதற்கு இடையூறாக இருந்த வைகோ உள்ளிட்டோர் கட்சியை விட்டு பாரபரட்சமின்றி தூக்கி வீசப்பட்டனர். ஒருகட்டத்தில் ஸ்டாலினுக்குப் போட்டியாக மற்றொரு மகன் முக அழகிரி களமிறங்கியதுதான் கருணாநிதியால் தாங்க முடியவில்லை.

அழகிரி ஆட்டம்
மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வெளிப்படையாக விமர்சனங்களை மு.க. அழகிரி முன்வைத்தார். ஒருகட்டத்தில் திமுகவுக்கு எதிராக சட்டசபை தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தினார். பின்னர் மீண்டும் திமுகவுக்கு திரும்பினார்.

ஓரம்கட்டப்பட்ட அழகிரி
ஆனாலும் கட்சியை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் மு.க. அழகிரி தீவிரம் காட்டினார். ஸ்டாலின் தரப்போ அப்படியெல்லாம் எளிதாக விட்டுவிட முடியாது என மல்லுக்கு நின்றது. இந்த யுத்தத்தில் மு.க.ஸ்டாலின் வெல்ல அழகிரி தோற்று மதுரையில் முடங்கிப் போனார்.

கனிமொழி
இனி முடிசூடா மன்னன் தாமே என ஸ்டாலின் தரப்பு நினைத்துக் கொண்டிருக்க அழகிரியுடன் கருணாநிதி மகள் கனிமொழி கை கோர்த்தார். இதை ரசிக்காத ஸ்டாலின் தரப்பு கனிமொழியை ஓரம்கட்டுவதற்கான என்னென்ன செய்ய முடியுமோ அத்தனை வேலைகளையும் செய்யத் தொடங்கியது.

காங்கிரஸ்
ஸ்பெக்ட்ரம் வழக்கில் காங்கிரஸின் ஆதரவை நம்பி இருப்பவர் கனிமொழி. இதனாலேயே காங்கிரஸ் கட்சியை சீண்டும் நடவடிக்கைகளை ஸ்டாலின் தரப்பு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தீவிர ஆலோசனை
இதனால் அண்ணன் முக அழகிரி பாணியில் ஸ்டாலினுக்கு எதிராக வெளிப்படையாக இறங்கி செயல்படலாமா என ஆலோசித்து வருகிறாராம் கனிமொழி. அதேநேரத்தில் தமக்கான ஆதரவு, பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் தீவிரமாக யோசிக்க வேண்டியிருக்கிறது என்பதும் கனிமொழியின் கருத்தாம். விரைவில் திமுகவில் புதிய கலகக்குரல் எழ வாய்ப்பிருக்கிறது என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications