கர்நாடகா: காவிரியில் 85,000 கன அடிநீரை திறந்துவிட்ட கர்நாடகா! ஒகேனக்கல்லில் பயங்கர வெள்ளம்!
மண்டியா: கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்) அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. ஏற்கனவே கபினி அணை முழுமையான கொள்ளளவை எட்டிவிட்டது. இதனால் கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 50,000 கன அடிநீரை கர்நாடகா திறந்து இருப்பதால் கரையோரங்களில் வசிக்கும் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து மொத்தம் 85,000 கன அடிநீரை கர்நாடகா காவிரியில் திறந்துவிட்டுள்ளது.
கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை வெளுத்தெடுத்த காரணத்தால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. கேரளாவின் வயநாடு பகுதிதான் காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான கபிலா ஆற்றின் நீர்பிடிப்பு பகுதி. இந்த கபிலா ஆற்று நீர்தான் கர்நாடகாவின் கபினி அணையில் தேக்கப்படுகிறது.

கபினி அணை: கபினி அணை கடந்த வாரமே நிரம்பிவிட்டது. இதனால் கபினி அணையில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 70,000 கன அடி வரை நீர் திறந்துவிடப்பட்டது. தற்போது 35,000 கன அடிநீர் திறக்கப்பட்டு வருகிறது. கபினி அணையில் இருந்து திறந்துவிடப்படும் கபிலா ஆற்று நீர், கர்நாடகாவின் டி.நரசிப்புரா அருகே திருமாகூடலூ என்ற இடத்தில் காவிரியில் கலக்கிறது. இங்கிருந்து 'அகண்ட காவிரி'யாக உருமாறி தமிழ்நாட்டை நோக்கி காவிரி நீர் வெள்ளமாக சீறிப் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது.
கேஆர்எஸ் அணை நிரம்புகிறது: இந்த நிலையில் கர்நாடகாவின் குடகு உள்ளிட்ட காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் பெருமழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் காவிரியின் குறுக்கே மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவின் கண்ணம்பாடி அருகே கட்டப்பட்ட கிருஷ்ணராஜ சாகர் எனும் கேஆர்எஸ் அணைக்கான நீர்வரத்தும் மிகவும் அதிகரித்துள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடி. சனிக்கிழமையன்று அணையின் நீர்மட்டம் 121.40 அடி. தற்போது நீர்வரத்து வினாடிக்கு 60,000 கன அடிக்கும் அதிகமாக இருப்பதால் இன்று மாலைக்குள் கேஆர்எஸ் அணையும் நிரம்பும் நிலை உள்ளது.
கேஆர்எஸ் அணை நீர் திறப்பு: இதனால் கேஆர்எஸ் அணையின் 16 மதகுகள் வழியாக வினாடிக்கு 17,795 கன அடிநீர் திறந்துவிடப்பட்டது. பின்னர் இது 25,000 கன அடியாக அதிகரித்தது. இந்த காவிரி நீர் தமிழகம் நோக்கி கரைபுரண்டோடி வருகிறது. கேஆர்எஸ் அணை காவிரி நீர், கபினி அணையின் கபிலா ஆற்று நீர் இரண்டும் இணைந்து 'பெருவெள்ள காவிரி'யாக புதுவெள்ளப் பாய்ச்சலோடு தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது.
கர்நாடகா கிராமங்களுக்கு எச்சரிக்கை: இந்த நிலையில் கேஆர்எஸ் அணையில் இருந்து கர்நாடகா, வினாடிக்கு 50,000 கன அடி நீரைத் திறந்துவிட்டது. இதனால் கர்நாடகாவின் காவிரி கரையோரத்தின் 92 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்களின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள கர்நாடகாவின் மண்டியா மாவட்டம் முழு தயார் நிலையில் இருக்கிறது.
ஒகேனக்கல் நிலவரம்: காவிரியில் கர்நாடகா வினாடிக்கு 85,000 கன அடிநீரைதிறந்துவிட்டதால் பயங்கர வெள்ளம் காரணமாக தமிழ்நாடு- கர்நாடகா எல்லையான ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும் பரிசல்களை இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி நேற்று ஒகேனக்கல்லில் ஆய்வு நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சாந்தி, கர்நாடகாவில் இருந்து 75,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இரு மாநில எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. இந்த நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சம் கன அடியாக உயரவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் கரையோரத்தின் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications