அந்தமான் படகு விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்: கருணாநிதி
சென்னை: அந்தமான் படகு விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்துள்ள ஒரு லட்சம் இழப்பீடு குறைவு, குறைந்தபட்சம் ரூ.5 லட்சமாவது இழப்பீடு வழங்க வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இரங்கல்:
கேள்வி: அந்தமான் தீவில் படகு கவிழ்ந்து காஞ்சீபுரத்தை சேர்ந்த 19 சுற்றுலா பயணிகள் பலியானதாக செய்தி வந்திருக்கிறதே?.
பதில்: இந்த விபத்தில் பலியான அனைவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக அரசின் சார்பில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தற்போது அறிவித்துள்ள ஒரு லட்சம் ரூபாய் உதவிநிதி என்பது மிகவும் குறைவாகும். குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாயாவது தமிழக அரசின் சார்பில் அளிக்க வேண்டும்.

மத்திய அரசு பதில் மனு தாக்கல்:
கேள்வி: கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க தமிழக மீனவருக்கு உரிமை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்திருக்கிறதே?.
பதில்: தமிழகத்தின் சார்பில் மத்திய அரசில் பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர்களே மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து கவலைப்படுகிறார்கள். உதாரணமாக கூற வேண்டுமேயானால், ஜி.கே.வாசன் 2 நாட்களுக்கு முன்பு மத்திய அரசின் இந்த செய்தியை படித்துவிட்டு, கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.இந்திய நாட்டின் இறையாண்மைக்கு கட்டுப்பட்ட கச்சத்தீவின் உரிமையை இலங்கை நாட்டுக்கு விட்டுக்கொடுப்பது சம்பந்தமான பிரச்சினை நாடாளுமன்றத்தில் முறைப்படி விவாதிக்கப்பட்டு, அரசியல் சட்டத்திருத்தம் செய்யப்பட்டு, அதன் பிறகு நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தம் அல்ல என்றும், எனவே அந்த ஒப்பந்தம் செல்லாது என்றும் தெரிவிக்க வேண்டுமென்று கோரித்தான் தி.மு.க.வின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறோம். அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலே இருக்கும்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது தொடர்பான வழக்கு நடைபெறுவதும், அதிலே மத்திய அரசு ஒரு மனுவினை தாக்கல் செய்வதும் தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு காரியமாகும்.உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாக மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில்
தெரிவித்திருக்கலாம். அதற்கு மாறாக தமிழர்களின் மனதை நோகடிப்பதற்காகவே இப்படியரு மனுவினை மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது தமிழர்கள் அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒரு செயலாகும்.

4 நாடுகள் தீர்மானம்:
கேள்வி: ஐ.நா.மனித உரிமை சபையில் இலங்கைக்கு எதிராக 4 நாடுகள் தீர்மானம் கொண்டுவரப்போவதாக செய்தி வந்திருக்கிறதே?.
பதில்: ஆமாம், ஐ.நா. மனித உரிமை சபையில், இலங்கைக்கு எதிராக, சுதந்திரமான சர்வதேச போர்க்குற்ற விசாரணை வேண்டுமென்று கோரிக்கை வைத்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி ஆகிய 4 நாடுகள் தீர்மானங்களை கொண்டுவர உள்ளன.தீர்மானம் கொண்டுவரப்படும் 4 நாடுகளோடு இந்தியாவும் சேரவேண்டும் என்பது தான் தமிழர்களின் விண்ணப்பம், கோரிக்கை. இன்னும் அழுத்தந்திருத்தமாக குறிப்பிட வேண்டுமானால், இந்தியாவே தனியானதொரு தீர்மானத்தை ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கான தீவிரமான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

மத்திய அரசு....
அந்த தீர்மானத்தில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை சம்பந்தமாக சுதந்திரமான நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும், ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்கு ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு வேண்டுமென்றும் திட்டவட்டமாக குறிப்பிட வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை.இந்தியா இப்படிப்பட்ட தீர்மானத்தை கொண்டு வருமானால் ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள மனக்காயங்களுக்கு ஓரளவுக்காவது மருந்து தடவுவதாக அமையும். மத்திய அரசு எந்த மாதிரியான அணுகுமுறையை கையாளப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வெளிப்படையான செய்தி...
கேள்வி: காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சரவையில் தி.மு.க. அங்கம் வகித்த காரணத்தால்தான் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தி.மு.க.வுடன் சேராமல் அ.தி.மு.க.வுடன் தோழமை கொண்டதாகச் சொல்லிக்கொள்கிறார்களே?.
பதில்: அதுதான் காரணமா?. மேற்கு வங்காளத்தில் மேல்சபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு தெரிவித்திருப்பதாக வெளிப்படையாகவே செய்தி வந்திருக்கிறதே?' என இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications