என் பெயர் வட மொழிதான், ஆனால் அண்ணா சொன்னதால் அப்படியே இருக்கிறேன்.. கருணாநிதி
சென்னை: என் பெயர் வட மொழியில்தான் உள்ளது. அதை நானே சொல்கிறேன். ஆனால் பெற்றோர் வைத்த பெயர் அதை அப்படியே விட்டு விடு, மாற்றாதே என்று அண்ணா சொன்னதால், அண்ணா சொல்லுக்கு மாற்று இல்லை என்பதால் நான் கருணாநிதியாகவே இருக்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன்பழகனின் சகோதரர் ஜெ. கருணாநிதி - புனிதவள்ளி தம்பதியரின் மகள் கே. மீனா என்கிற மோனிஷாவுக்கும், சென்னை அண்ணா நகர் எஸ்.என். சந்திரசேகர் - ஜெயலட்சுமி ஆகியோரின் மகன் எஸ்.சி. யுவராஜ்க்கும் இன்று அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திருமணம் நடைபெற்றது.
கருணாநிதி திருமணத்தை நடத்தி வைத்து சிறப்புரையாற்றினார். அவரது சுவாரஸ்யமான பேச்சின் தொகுப்பு:

கொள்கையின் சின்னம்
இங்கே நன்றியுரையாற்றிய தம்பி ஜெ. அன்பழகன் குறிப்பிடும்போது, தனக்குப் பிறகும் இந்தக் கழகம் இருக்கும் என்ற உறுதியைச் சொன்னது மாத்திரமல்ல; தான் மறைந்து, இந்தக் கழகத்தை, கழகத்தின் கொள்கைகளைக் காப்பாற்றுகின்ற சின்னமாக விளங்குவேன் என்று குறிப்பிட்டார்.

கழகம் ஒரு குடும்பம்
"மறைந்து" என்ற இந்த வார்த்தையை கேட்ட போது, என்னுடைய இதயம் எப்படித் துடித்திருக்கும், எத்தகைய உணர்வுகளுக்கு ஆட்பட்டிருக்கும் என்பதை அவரும் அறிய மாட்டார்; உங்களில் பலரும் அறிவதற்கு வாய்ப்பு இல்லை. இங்கே நண்பர்கள் குறிப்பிட்டதைப் போல, குடும்பமாக இந்தக் கழகத்தை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். அரசியல் கட்சியாகவோ அல்லது சமுதாய இயக்கமாகவோ மாத்திரமல்ல; சமுதாயப் புரட்சியை உருவாக்குகின்ற ஒரு இயக்கமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தை நாம் இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கிறோம்.

வீழ்த்த யாரும் பிறக்கவில்லை
இந்தக் கழகத்திலே தம்பி அன்பழகனைப் போன்றவர்கள், இந்த வளர்ச்சிக்கு எந்த அளவுக்குப் பாடுபட்டிருக்கின்றார்கள், பாடுபடுகிறார்கள், மேலும் பாடுபடவிருக்கிறார்கள் என்பதை யெல்லாம் எண்ணும்போது, யார் என்னசொன்ன போதிலும், யார் கலகமூட்டி, தங்களுடைய திருவிளையாடல்களை நடத்திய போதிலும், இந்தக் கழகத்தை வீழ்த்துவதற்கு யாரும் இன்னும் பிறக்கவில்லை என்பதை நானும் உறுதியாக நம்புகிறேன், நீங்களும் நம்புவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

ஏகப்பட்ட அன்பழகன்கள்
திராவிட முன்னேற்றக் கழகத்தை நடத்துவதற்கு தன்னுடைய பகுதியை மேலும் மேலும் வளர்ப்பதற்கு நம்முடைய அருமைத் தம்பி அன்பழகனைப் போன்றவர்கள் இந்த இயக்கத்திலே நிறைய பெயர் பெற்றிருக்கிறார்கள். என் அருகில் அமர்ந்திருக்கின்ற கழகத்தின் பொதுச் செயலாளர் "அன்பழகன்" என்ற பெயருக்குரியவர். அந்தப் பெயரைக் காப்பாற்றுகின்ற வகையில் அன்பழகன் என்ற பெயர் சூட்டப்பட்டவர்கள் நடந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய உண்டு. ஏனென்றால் அந்தப் பெயரைத் தேர்வு செய்வதற்கு, திராவிட இயக்கத்திற்கு ஏற்பட்டுள்ள அந்தத் துணிவை, மற்ற இயக்கங்கள் பெறவில்லை.

இட்ட பெயர் ஒன்று... சூட்டிய பெயர் ஒன்று
காரணம் திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்று தான் தனக்கு தங்கள் பெற்றோர் இட்டப் பெயரை, உற்றார் உறவினர்கள் சூட்டிய பெயரை அதிலே தமிழ் உணர்வு இல்லை, தமிழர்களுடைய இனமான உணர்வு இல்லை, பகுத்தறிவு உணர்வு இல்லை என்ற காரணங்களால் அவற்றை மாற்றிக் கொண்டு, தாங்கள் விரும்புகின்ற பெயர்களில் அன்பழகன் என்றும், மற்றும் (பேராசிரியர் குறுக்கிட்டு உங்கள் பெயரையும் சேர்த்துக் கொள்ளலாம், உங்கள் பெயரையும் அந்த உணர்வோடு வைத்திருக்கிறார் என்று கூற) என்னுடைய பெயரும் அந்தக் குடும்பத்திலே இருக்கிறது என்று சொன்னார். "கருணாநிதி" என்பதிலே என்ன தான் உணர்வு இருந்தாலுங்கூட, அது வடமொழி பெயர். நானே சொல்லிக் கொள்கிறேன்.

மாற்றச் சொன்ன அண்ணல்தங்கோ
அது வடமொழி பெயராக இருந்த காரணத்தால், திராவிட இயக்கம் தோன்றிய போது, திராவிட இயக்கத்திலே தமிழ்ப் பெயர்களை நாம் வைத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் விரும்பி பாடுபட்ட குடியேற்றம் அண்ணல்தங்கோ போன்றவர்கள் என்னைச் சந்தித்த போதும், எனக்கு மடல்கள் எழுதிய போதும் என் பெயரை "அருள் செல்வர்" என்று மாற்றிக் கொள்ள வேண்டுமென்று சொன்னார்கள். அதை நான் விரும்பவில்லை.

துறவி பெயர் போல இருக்கிறதே
காரணம், அருள்செல்வன் என்றால் அது ஏதோ ஒரு துறவியின் பெயர் போல இருக்கிறது என்பதற்காக நான் அதை விரும்பவில்லை, ஏற்றுக் கொள்ளவில்லை.

அண்ணா சொன்னால் அப்பீல் ஏது...
அண்ணாவிடம் கேட்டேன், பெயரை மாற்றிக்கொள்ளச் சொல்லி அண்ணல்தங்கோ எழுதியிருக்கிறாரே அண்ணா, என்ன செய்வது என்றேன். அண்ணா சொன்னார். இந்தப் பெயர் பழகி விட்டது, எல்லோருக்கும் தெரிந்த பெயராக ஆகி விட்டது. அதை மாற்றி, எந்தப் பெயரை இப்படி மாற்றியிருக்கிறோம் என்று வேறு ஒரு புதிய பெயரை வேலையற்றுப் போய்ச் சொல்லிக் கொண்டிருக்க தேவையில்லை, உன்னுடைய பெற்றோர் வைத்த பெயரே இருக்கட்டும் என்று அண்ணா சொன்ன காரணத்தால், அண்ணா சொன்னதற்கு வேறு மாற்றுச் சொல் இல்லை என்று என்றைக்கும் கருதுகிற நான், அன்றைக்கும் ஏற்றுக் கொண்டு, "கருணாநிதி"யாகவே இருந்து விட்டேன்.

இறுதி வரை கருணாநிதிதான்
கருணாநிதியாகவே இறுதி வரை இருப்பது என்ற உணர்வோடு இருந்தேன். இன்றைக்கும் இருக்கிறேன். என்றைக்கும் இருப்பேன் என்ற அந்த உறுதியை உங்களுக்கெல்லாம் நான் வழங்குகிறேன். நம்முடைய பழக்கடை ஜெயராமன் என்றாலே எல்லோருக்கும் தெரிந்த ஒரு பெயராக, திராவிட இயக்கத்தின் அடி நாதமாக விளங்குகின்ற தொண்டர்களுடைய கூட்டத்திலே உள்ள ஒருவருடைய பெயராக அமைந்து, அந்தப் பெயரைச் சொன்னாலே ஒரு உணர்ச்சி பெருக்கு இருக்கும் என்ற நிலையிலே விளங்கிய அந்தப் பெயரை தியாகராயநகர் பகுதிக் கழகச் செயலாளராகத் திறம்பட பணியாற்றிய பழக்கடை ஜெயராமன், தென் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி ஜெ. அன்பழகன் ஆகியோருடைய இல்லங்களில் நடைபெறுகின்ற இந்த மண விழா நிகழ்ச்சியில் வருகை தந்துள்ள அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், வணக்கங்களையும் நான் நன்றியறிதலோடு கூறிக் கொண்டு அவர்களையெல்லாம் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

திராவிடக் குடும்பம்
இந்த மணவிழாவினை நடத்துகின்ற தம்பி ஜெ. அன்பழகனுக்கு இந்த உந்துதல், உணர்வு எப்படி ஏற்பட்டது என்பதை இங்கே பேசிய நண்பர் ஒருவர் விளக்கினார். இந்தக் குடும்பமே ஒரு பகுத்தறிவு குடும்பம். இந்தக் குடும்பமே திராவிட இயக்கத்தோடு தொடர்புடைய குடும்பம். இன்று நேற்றல்ல. நீண்ட காலமாக சென்னையிலே பழக்கடை ஜெயராமன் என்றாலே யார், எப்படிப்பட்டவர், எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர் என்ற அளவுக்கு விவரங்களை யெல்லாம் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குக்கிராமங்களிலும் உண்டு.

பழக்கடை ஜெயராமன் குடும்பத்துக்கு நன்றி
அப்படிப்பட்ட புகழுக்குரியவராக, அப்படிப்பட்ட தியாகத்திற்கு உரியவராக, அப்படிப்பட்ட பெருமைக்கு உரியவராக வாழ்ந்தவரின் இந்தக் குடும்பத்துச் செல்வங்கள், நம் அனைவருடைய அன்பான வாழ்த்துகளோடு மணவிழாவினை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து வாழ நான் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய நன்றியை இந்தக் குடும்பத்தாருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துவது என்பது மண மக்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதற்காக! நன்றி தெரிவிப்பது என்பது இன்னமும் எங்களைப் போன்ற, என்னைப் போன்ற, நம்முடைய பேராசிரியரைப் போன்ற கழகத்தின் மூத்தத் தலைவர்களை எண்ணி மகிழ்ந்து அவர்களுடைய வழியில் நடப்போம் என்று உறுதி பூண்டு நடந்து கொண்டிருக்கின்ற ஜெ. அன்பழகனின் குடும்பத்தாரை, அவருடைய நண்பர்களை, அவருடைய உற்றார் உறவினர்களை வாழ்த்துவதாகப் பொருள். அப்படிப்பட்ட உற்றார் உறவினரையும், சுற்றத்தாரையும், நண்பர்களையும் பெற்றிருக்கின்ற அன்பழகனின் குடும்பம் இந்தத் திருமணத்தின் மூலமாக மேலும் சிறப்படைகிறது என்பதை எடுத்துச் சொல்லி, இந்த மண மக்களை வாழ்வாங்கு வாழ்ந்திட வாழ்த்தி, என்னுடைய வாழ்த்துரையை நிறைவு செய்கிறேன் என்றார் கருணாநிதி.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications