மின்துறைக்கான உதய் திட்டத்தை முன்வைத்து ஜெ.க்கு கருணாநிதி சரமாரி கேள்விகள்
சென்னை: மின்சார துறைக்கான மத்திய அரசின் உதய் திட்டத்தை முன்வைத்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை:
பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் தலைமையில் 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மாநிலங்களின் மின் விநியோகத் திறனை மேம்படுத்தவும், மின்உற்பத்தி விலையைக் குறைக்கவும், மின் விநியோக அமைப்புகளின் வட்டிச் சுமையைக் குறைக்கவும், மின்விநியோக அமைப்புகளில் நிதிஒழுக்கத்தையும் மேலாண்மையையும் நிலை நாட்டவும், "உதய்" (UDAY- Ujwal DISCOM Assurance Yojana) என்னும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மின் திருட்டைக் கட்டுப்படுத்துவதும், மின் உற்பத்தியாகும் செலவுக் கேற்றபடி மின் கட்டணத்தை மாற்றி அமைப்பதும் இத்திட்டத்தின் செயல் நோக்கங்களாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன.

மத்திய அமைச்சர்கள் புகார்
2016-ஏப்ரல் மாதத்தில் அதாவது சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலுக்கு முன்பு மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயல் அவர்களும் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களும், தமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்றுவதைப் பற்றிப் பேசுவதற்காகத் தொடர்ச்சியாகப் பலமுறை முயற்சி செய்தும், முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்கவே இயலவில்லை என்று கடுமையான முறையில் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியிருந்ததைத் தொடர்ந்து; மற்றொரு மத்திய அமைச்சரான ஜவடேகர் அவர்களும் தமிழக அரசின் மீதும், முதலமைச்சர் ஜெயலலிதா மீதும் பல குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காகச் சுமத்தியிருந்தார்.

ஜவடேகர் சொன்னது...
மத்திய அமைச்சர் ஜவடேகர் அவர்கள், "மின் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு ஆதரவாகவே தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் நலனில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வுக்கு அக்கறை இல்லை. தமிழக மின் வாரியத்திற்குக் கடந்த ஆண்டுகளில் மட்டும் 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மின் திருட்டு அதிகரித்து வருகிறது. அப்படியிருந்தும் தமிழகத்தில் மின்சாரத் துறையை நட்டத்திலிருந்து மீட்கவும், வருவாயை அதிகரிக்கவும் உதவும் மத்திய அரசின் "உதய்" என்னும் திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசு முன் வரவில்லை. இத்திட்டத்தைப் பின்பற்றும் மற்ற மாநிலங்கள் நல்ல பலனைப் பெற்றுள்ளன; மற்ற மாநிலங்களில் செயல்படுத்தியதன் மூலம் 1.80 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குப் பலன் கிடைத்துள்ளது. ஆனால் தமிழக அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லாததால், மின் நுகர்வோர் பயன்பெறுவதைத் தமிழக அரசு விரும்பவில்லை"என்று தமிழக அரசையும் முதலமைச்சர் ஜெயலலிதாவையும் நேரடியாகவே குற்றம் சாட்டியிருந்தார்.

அமைச்சர்கள் விளக்கம்
"இவ்வாறு தன்மீதும், தமிழக அரசின் மீதும் சாட்டப்பட்ட கடுமையான குற்றச்சாட்டுகளுக்குப் பதில் கூறவேண்டிய முதலமைச்சர் ஜெயலலிதா, அவரிடமிருந்து உரிய விளக்கத்தை எதிர்பார்க்கும் மக்கள் மன்றத்தின் முன் என்ன பதில் சொல்லப் போகிறார்?" என்று கேட்டு நான், 2-4-2016 அன்று அறிக்கை வெளியிட்டிருந்தேன். தமிழக மக்கள் நலன் கருதி, முக்கியமான மின் விநியோகப் பிரச்சினை குறித்து, நான் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நேரடியாக பதில் அளிக்காமல், தன்னுடைய இரண்டு அமைச் சர்களைக் (விசுவநாதன் மற்றும் வேலுமணி) கொண்டு, மத்திய அரசின் "உதய்" திட்டம் பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை என்றும், நான் குழப்பமான அறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் 6-4-2016 அன்று அறிக்கை வெளியிடச் செய்தார். மேலும் தமிழக அரசு மீது குற்றம் சுமத்திய மத்திய அமைச்சர் ஜவடேகரைக் குறிப்பிட்டு, "விவசாயிகளும் குடிசை வாழ் ஏழை மக்களும் மின் திருட்டில் ஈடுபடுவதாக மத்திய அமைச்சர் தெரிவிக்கிறாரா? "உதய்" திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த தொழில் நுட்ப மற்றும் வணிக மின் இழப்பு, 2018-2019க்குள், 15 சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டுமென வரையறை இருந்தாலும், அதற்குத் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்த அந்தத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒரு ரூபாய்கூட வழங்க வழி செய்யவில்லை. மத்திய அரசின் திட்டம் தமிழக மக்களுக்குப் பயன் அளிக்காத திட்டம்" என்று தமிழக அமைச்சர்கள் அறிக்கை வெளியிட்டனர்.

விருத்தாசலத்தில் ஜெ. பேச்சு
மத்திய அரசின் "உதய்" திட்டம் பற்றி அமைச்சர் கள் வெளியிட்ட அறிக்கை போதாது என்று கருதிய முதலமைச்சர் ஜெயலலிதா, 11-4-2016 அன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், "உதய்" திட்டத்தால் தமிழக அரசுக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும். மின்சார வாரியங் களின் கடன்களை மாநில அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு ஏற்றுக் கொண்டால் மின்சார வாரியங்கள் மீண்டும் கடன் பெற்று மின்சாரத்தை வாங்கி மக்களுக்கு வழங்க இயலும் என்ற அடிப்படையிலும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவேதான் இந்தத் திட்டம் தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கும், வங்கிகளுக்கும் இலாபகரமாக அமையும் என்றாலும் தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் பாதிப்பையே ஏற்படுத்தும்.

எதிரான கருத்துகள்
நிதிப் பொறுப்பு மற்றும் வரவு செலவு மேலாண்மை வரையறைகளுக்கு இரண்டு ஆண்டு களுக்கு மட்டுமே தளர்வு செய்யப்படுவதால், அடுத்த ஆண்டிலிருந்து மாநில அரசால் கடன் எதையும் பெற இயலாது; எனவே வளர்ச்சித் திட்டங்கள் எதையும் செயல்படுத்த இயலாது" என்றும்; மேலும் பல குறைகளைச் சுட்டிக்காட்டியும்; "மத்திய அமைச்சர் ஜவடேகர் கூறிய எதுவும் கருணாநிதிக்குப் புரிய வில்லை" என்றும் பேசிய ஜெயலலிதா "உதய்" திட்டத்திற்கு எதிரான கருத்துக்களையே தொகுத்துப் பேசினார்.

உதய் திட்டத்தில்?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிந்ததும், முன்பு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்கவே முடியவில்லை என்று பகிரங்கமாக அறிவித்த மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியுஷ் கோயல், அண்மையில் சென்னை வந்து ஜெயலலிதா வைச் சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பிற்குப் பிறகு, தமிழக அதிகாரிகள் டெல்லி சென்று பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். அதனையொட்டி, "உதய்" திட்டத்தில் தமிழகஅரசு விரைவில் இணைய விருப்ப தாக நாளேடுகளில் இப்போது செய்தி வெளியாகியுள்ளது.

சட்டசபையில் அறிவிக்கலையே?
தமிழக மக்கள் நலனையும், வேளாண்மையையும், தொழில் வளர்ச்சியையும் மையமாகக் கொண் டிருக்கும் முக்கியமான இந்தப் பிரச்சினையில் முடிவெடுத்திருந்தால், அதை நடைபெற்றுக் கொண் டிருக்கின்ற தமிழகச் சட்டப்பேரவையில் அல்லவா அறிவித்திருக்க வேண்டும்? மின்வாரியத்தின் மொத்த கடனில் 75 சதவீதத்தை மாநில அரசு ஏற்க வேண்டும்; மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின்சாரக் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பன போன்ற கடுமையான அம்சங்கள் "உதய்" திட்டத்தில் இடம் பெற்றுள்ளதால், ஒருவேளை மின்சாரத் துறை மானியக் கோரிக்கையின் போது, அறிவிக்கக் கருதியிருக்கிறார்களோ, என்னவோ?

தீர்வு வந்ததா?
எப்படியாயினும் "உதய்" திட்டம் பற்றிச் சட்டப் பேரவையில் தமிழக அரசின் சார்பில் ஜெயலலிதா பதில் அளித்திட வேண்டிய வினாக்கள் நிரம்ப இருக்கின்றன. ஜெயலலிதாவும், அமைச்சர்களும் முறையே தேர்தல் பிரச்சாரத்திலும், அறிக்கை மூலமாகவும் "உதய்" திட்டம் பற்றி எழுப்பியிருக்கும் பிரச் சினைகளுக்குத் தற்போது மாநில நலனுக்கு உகந்த உரிய தீர்வு காணப்பட்டு விட்டதா?

உகந்த நிலை உண்டா?
தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கும், வங்கிகளுக்கும் இலாபகரமாக அமைந்திருக்கும் இந்தத் திட்டத்தினால் தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் பாதிப்பே ஏற்படும் என்று சொன்னீர்களே; தற்போது அந்த பாதிப்பு நீக்கப்பட்டுவிட்டதா? அடுத்த ஆண்டிலிருந்து மாநில அரசால் கடன் எதையும் பெற இயலாது என்று சொன்னீர்களே; தற்போது மாநில அரசு கடன் பெறக்கூடிய நிலைமை உருவாக்கப்பட்டிருக்கிறதா? வளர்ச்சித் திட்டங்கள் எதையும் செயல்படுத்த இயலாது என்று சொன்னீர்களே; வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு உகந்த நிலை தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கிறதா?

மின்துறை கடன், வட்டி
"கட்டுப்பாடுகள் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் தளர்வு என்பதை மாற்றி, அசல் மற்றும் வட்டியைத் திருப்பிச் செலுத்தும் காலமான 15 ஆண்டுகளுக்கும் தளர்வு வழங்கப்பட வேண்டும் என்றும், மாநில அரசு பொறுப்பெடுத்துக் கொள்ளும் கடன் தொகையில் மத்திய அரசும் பங்கு ஏற்று மானியம் வழங்கிட வேண்டும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் மின் வாரியத்திற்கு ஏற்படும் நட்டத்தைச் சமாளிக்கும் பொருட்டு வங்கிகள் மூலம் கடன் பெற வகை செய்யப்பட வேண்டும் என்றும், அவ்வாறு செய்யப்பட்டால் வங்கிகளிலிருந்து தமிழ்நாடு மின்சார வாரியம் பெற்றுள்ள 17,500 கோடி ரூபாய் கடனை மாநில அரசு எடுத்துக்கொள்ளும் என்றும் நான் தெரிவித்து இருந்தேன்"" என்று பேசியிருந்தீர்களே; தற்போது, தளர்வு 15 ஆண்டுகளுக்கு உண்டு என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டதா? கடன் தொகையில் மத்திய அரசும் பங்கேற்று மானியம் வழங்கிட ஒத்துக்கொண்டுள்ளார்களா? நட்டத்தைச் சமாளிக்க வங்கிகள் மூலம் கடன் பெற வகை செய்யப்பட்டுவிட்டதா?

மின்கட்டணம் மாற்றி அமைப்பு?
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டு மென்ற நிபந்தனையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றீர்களே; இப்போதும் அதே நிலைப்பாட்டில்தான் உறுதியாக நிற்கிறீர்களா; அல்லது மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அந்த நிலைப்பாடு நீர்த்துப்போய்விட்டதா? மின் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபடு வோருக்கு ஆதரவாகவே தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்று மத்திய அமைச்சர் குற்றம் சாட்டியிருந்தாரே; தற்போது அவர்அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டாரா?

மின் இழப்பு விவகாரம்....
"உதய்" திட்டத்தின் மூலம் ஒட்டு மொத்த தொழில் நுட்ப மற்றும் வணிக மின் இழப்பை இரண்டு ஆண்டுகளில் 15 சதவீதமாகக் குறைத் திடத் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்த மத்திய அரசு போதுமான நிதியை வழங்கிட ஒப்புக்கொண்டுள்ளதா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஜெயலலிதா உரிய பதில்களை சட்டப்பேரவை விவாதத்தின் மூலம் நாட்டு மக்களுக்குச் சொல்ல முன்வர வில்லை என்றால் "மக்கள் நலனில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அக்கறை இல்லை" என்று மத்திய அமைச்சர் நேரடியாகக் குற்றம் சுமத்தியதையும்; நேரடியான அந்த குற்றச் சாட்டிற்குப் பதில் அளிக் காமல் ஜெயலலிதாவும் இரண்டு அமைச்சர்களும் என் மீது பாய்ந் ததையும்; "உதய்" திட்டம் தமிழக நலனுக்குப் பாதகமானது என்று விஸ்தாரமாக ஜெயலலிதா பேசியதையும்; அப்படியெல்லாம் பேசியதற்கும் தற்போது நடப்பதற்கும் உள்ள முரண்பாடுகளையும் தமிழக மக்கள் புரிந்துகொள்ளுவார்கள்; "உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு" எங்கு போய் முடியும் என்பதையும் அறிந்து கொள்வார்கள்!












Click it and Unblock the Notifications