இதுவே நான் கலந்துகொள்ளும் கடைசி தேர்தலாக இருக்கலாம்... கோவை பிரச்சாரத்தில் கருணாநிதி உருக்கம்
கோவை: இதுவே தான் கலந்து கொள்ளும் கடைசி தேர்தலாக கூட இருக்கலாம், எனவே மக்களுக்காக நல்லாட்சியை தர வேண்டிய காலகட்டத்தில் தாங்கள் உள்ளதாக தனது கோவை பிரசார கூட்டத்தில் கருணாநிதி உருக்கமாக தெரிவித்தார்.
16வது லோக்சபா தேர்தல் நாளை தொடங்கி 9 கட்டங்களாக வரும் மே 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 24ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
எனவே, தேர்தல் பணிகளில் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. நாடு முழுவதும் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், நேற்று கோவை வ.உ.சி. மைதானத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது.
அதில், நீலகிரி லோக்சபா தொகுதி வேட்பாளர் அ.ராசா, கோவை லோக்சபா தொகுதி வேட்பாளர் வக்கீல் கணேஷ்குமார், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி ஆகியோரை மேடையில் அறிமுகப்படுத்தி தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-

எனது வேண்டுகோள்...
கடந்த சில மாதங்களாகவே மிகுந்த உடல் நலிவுக்கு இடையே சிரமப்பட்டுக்கொண்டு இருக்கின்ற நான் இன்றைய தினம் தி.மு.க. அந்த தோழமை கட்சிகள் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற செய்ய வேண்டும். அதற்கு உங்களுடைய அன்பும், ஆதரவும் நிரம்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து விடைபெற இருக்கிறேன்.

இன எழுச்சி...
தி.மு.க.வை பொறுத்தவரை தேர்தலுக்காக மாத்திரம் அல்ல. இது இன எழுச்சிக்காக, இன ஒற்றுமைக்காக தொடங்கப்பட்ட இயக்கம். இனத்தை உணர, இனம், இனத்தைச் சார்ந்து எழுச்சி பெற பெரியார், அண்ணா ஆகியோரால் வளர்க்கப்பட்ட இயக்கம் தி.மு.க. இந்த இயக்கம் பிறந்தது தேர்தலுக்காக அல்ல. இந்த இனத்தை வாழ்விக்க வேண்டும் என்பதற்காக தான்.

தள்ளாடாத சுயமரியாதை...
கருணாநிதி 91 வயதிலும் உழைக்கிறார் என்று பேசினீர்கள். ஆனால் தள்ளாடும் பருவத்தில் இருந்தாலும் என்னுடைய மொழி தள்ளாடக்கூடாது. என்னுடைய இனம் தள்ளாடக்கூடாது. என்னுடைய சுயமரியாதை தள்ளாடக் கூடாது.

எனது உறுதி...
நான் பெரியார், அண்ணா வழியிலும் சிந்தித்து, அவர்கள் இட்ட கட்டளையை என் வாழ்நாள் முடிகின்ற வரையில் உழைக்க வேண்டும் என்ற உறுதி எடுத்துக்கொண்டவன் கருணாநிதி என்பதை தெரிவிக்கிறேன்.

தமிழனின் தன்மானம்...
தேர்தலில் ஒரு 4 பேரை வெற்றி பெற செய்வதன் மூலம் இந்த இயக்கத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும். நாம் சுட்டிக் காட்டியவர் பிரதமர் ஆக வேண்டும் என்று எல்லாம் ஆசை நிறைவேற்றிக்கொள்ள அல்ல. தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும். தலை தாழக்கூடாது. அதற்காகத்தான் இந்த இயக்கம் அன்று முதல் இன்று முதல் பாடுபட்டு பணியாற்றி வருகிறது.

அண்ணா ஏற்றி வைத்த சுடர்...
அப்படிப்பட்ட இயக்கத்துக்கு அண்ணா ஏற்றி வைத்த சுடர் விளக்கு அணையாமல் காக்கும் பெரும் பொறுப்பை உங்களை நம்பி நான் ஏற்று இருக்கிறேன். இந்த மக்களுக்கான ஆட்சியை, நல்லாட்சியை தர வேண்டிய கட்டம். இங்கு திரண்டு இருக்கும் நீங்கள் அரவணைப்பாக இருந்து இயக்கத்தை காக்க முன்வந்து உள்ளீர்கள். அதற்காக நன்றியை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.

நாம் தமிழர்கள்....
இவன் எப்போது ஓய்வு எடுப்பான். அந்த நேரத்தில் அடிமைத்தனத்துக்கு உள்ளாக்கலாம் என்று கருதியவர்கள் அதை வெற்றிகரமாக செய்கிறார்கள். அவர்களின் மனப்போக்கை முறியடிக்க வேண்டும். உங்களுக்கு எல்லாம். என்னையும் சேர்த்து விடுதலை வாங்கித்தர வேண்டும். நாம் எல்லாம் தமிழர்கள். அந்த உணர்வை பெற்றாக வேண்டும் என்பதற்காக தான் நான் பாடுபட்டு வருகிறேன்.

கடைசி தேர்தல்...
எனக்கு தெரியாது, ஒரு வேளை இதுவே நான் கலந்துகொள்கிற கடைசி தேர்தலாக இருக்கலாம். அப்படி சொல்லாதே சொல்லாதே என்று கையை வீசுகிறீர்கள். அப்படி சொல்லாமல் இருக்க. நாங்கள் தமிழர்களாக வாழ்வோம். யாருக்கும் அடிமையாக இருக்கமாட்டோம் என்ற உறுதியை நீங்கள் அளித்தாக வேண்டும். அப்படி செய்தால், நான் இன்னும் 50 வருடங்கள் உயிரோடு இருப்பேன். இல்லை அடிமையாக வாழ வேண்டிய நிலை இருக்குமானால் அது வாழ்க்கையாக இருக்காது.

எனது நம்பிக்கை....
எனக்கு இருக்கிற நம்பிக்கை எல்லாம். இங்குள்ள இளைஞர்கள் இயக்கத்தை என்றும் காப்பாற்றுவீர்கள். காப்பாற்றியே தீருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

இந்திப் பெண்ணே கேள்...
என்னுடைய 11 வயதில் மொழி காக்க, ஓடிவந்த இந்திப் பெண்ணே கேள் நீ தேடி வந்த கோழை உள்ள நாடு இது அல்லவே என்று பாடியவன் நான். அந்த மொழி உணர்வு இந்த 91 வயதிலும் பட்டுப்போக வில்லை. இந்த பக்குவம், உணர்ச்சியை இளைஞர்கள் பெற வேண்டும்.

கேட்பாரற்ற மாநிலமானது...
இந்தி வராது. அது கட்டாயமாக நுழையவும் நுழையாது. அதுமாத்திரம் அல்ல. தமிழ்நாடு கேட்பாரற்று ஆகி விட்டது. தமிழ்நாட்டிலே எவர் வேண்டுமானாலும் நுழையலாம். அத்துமீறி நுழையலாம். ஆட்சி புரியவே எண்ணம் கொண்டு நுழைவோம். இந்த எண்ணம் மோடிகளுக்கு ஏற்படாது.

தமிழகம் பொட்டல்காடாக வேண்டுமா...?
இந்த ஆட்சி தொடர்ந்தால் தமிழ்நாடு பொட்டல்காடாக ஆகும். தமிழ்நாடு பொட்டல் காடாக வேண்டும் என்று கருதினால் அந்த அம்மையார் சுட்டிக்காட்டுகின்ற வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். இல்லை என்றால் நாங்கள் உங்களோடு இருப்பவர்கள். சாவு, வாழ்விலும் உங்களோடு இருப்பவர்கள். எங்களுடைய பேச்சை உதாசீனப்படுத்தினால் அதன் விளைவுகளை அனுபவியுங்கள் என்று சாபம் விடுவதை தவிர வேறு வழி இல்லை.

நம்பிக்கையோடு....
வாழ வைக்க முன்வருவீர்கள் என்ற நம்பிக்கையோடு, உங்களை சந்திக்க அரிய வாய்ப்பு பெற்றமைக்கு என்னுடைய வாழ்த்துகளை உணர்வுகளை கொட்டினோம் என்ற திருப்தியோடு விடைபெற்றுக்கொள்கிறேன்' என இவ்வாறு கருணாநிதி பேசினார்.












Click it and Unblock the Notifications