நாகரீகத்தை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.. கருணாநிதி
சென்னை: முதல்வர் என்ற பதியில் இருப்பவருக்கென்று ஒரு நாகரீகம் உள்ளது. ஆனால் அதை முதல்வர் ஜெயலலிதா அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
நதி நீர்ப் பிரச்சினை தொடர்பான முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி இடையிலான அறிக்கைப் போர் தொடர்கிறது. முதல்வர் வெளியிட்ட பதில் அறிக்கைக்கு தற்போது கருணாநிதி பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை...

நாகரீகம் இல்லை
முதல்வர் என்ற பதவியிலே இருப்பவர் பேசுவதற்கோ, அறிக்கை விடுவதற்கோ ஒரு நாகரிகம் உண்டு. ஆனால் அந்தப் பதவியையே அசிங்கப்படுத்திக் கொண்டிருப்பவர்தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா! வார்த்தைப் போட்டிக்கு வர விரும்பவில்லை!

சாக்கடையை அள்ளினால்
அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற ஆணவத்தில், அவருடைய அறிக்கையை முழுவதுமாக வெளியிட முழுப் பக்க விளம்பரங்களைப் பெறுகிற ஒருசில பத்திரிகைகள் இருக்கின்றன என்ற இறுமாப்பில் எதை வேண்டுமானாலும் தான் எழுதலாம் என்ற நினைப்பில் நதி நீர்ப் பிரச்சினை பற்றி நீண்ட அறிக்கையினை மீண்டும் வெளியிட்டிருக்கிறார். அதில் வழக்கம் போல - அரசியல் ஆதாயம் அடையலாம் என்று நான் எதிர்பார்த்து - வெத்து வேட்டு அறிக்கை வெளியிட்டு - தன்னிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதாகவும் எழுதியிருக்கிறார். சாக்கடையை கையினால் அள்ளினால் கை அழுக்காகாமல் என்ன செய்யும்?

நான் என்ன கேட்டேன்
"அரைவேக்காடு யார்?"" என்ற தலைப்பில் நான் 30-6-2014 அன்று எழுதிய கடிதத்திற்கு 7-7-2014 அன்று ஜெயலலிதா பதில் அளித்திருக்கிறார். அந்தப் பதிலில் வழக்கம் போல என்னை வீண் வம்புக்கு இழுத்திருக்கிறார். முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு ஆகிய அணைகள் 2012ஆம் ஆண்டு கேரளாவுக்குச் சொந்தம் என்று மாற்றப்பட்டதாக, கேரள சட்டசபையில் அந்த மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்து, ஏடுகளில் அந்தச் செய்தி வந்ததைக் குறிப்பிட்டு, அதற்கு தமிழகத்தின் பதில் என்ன என்று கூற வேண்டாமா என்று கேட்டிருந்தேன்.

யார் அரை வேக்காடு
இதற்கு ஜெயலலிதா, கேரள முதல்வருக்குப் பதில் கூறாமல், நான் ஏதோ தெரியாமல் கேட்டு விட்டேன் என்று எண்ணிக் கொண்டு, என்னை "அரைவேக்காடு" என்றெல்லாம் அநாகரிகமாகக் குறிப்பிட்டு பதில் அளித்திருந்தார். அதற்குத்தான் நான் விளக்கம் தெரிவித்து, அரைவேக்காடு யார்? நானா? ஜெயலலிதாவா? என்று கேட்டிருந்தேன்.

என் மீது கோபப்படலாமா...
ஜெயலலிதாவின் இந்தப் பதில் பற்றி டெல்லியில் நாளிதழ் செய்தியாளர், கேரள முதலமைச்சரைச் சந்தித்து கேள்வி கேட்ட போது, கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டமாக இந்த நான்கு அணைகளும் தமிழ்நாட்டால் பராமரிக்கப்பட்ட போதிலும், அவற்றுக்கு தமிழ்நாடு சொந்தம் கொண்டாட முடியாது; தேசியப் பேரணைகள் பதிவேட்டில் இந்த நான்கு அணைகளும் கேரளாவுக்குச் சொந்தமானவை என்றே பதிவாகியுள்ளது, இந்தப் பிரச்சினையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று பதில் அளித்திருக்கிறார். எனவே தமிழக முதலமைச்சர் பதில் கூற வேண்டியது கேரள முதல் அமைச்சருக்குத்தானே தவிர, என்னிடம் கோபப்பட்டு, ஆத்திரத்தைக் காட்ட வேண்டியதில்லை என்று 1-7-2014 அன்றே தெரிவித்திருந்தேன்.

தெம்பு இருந்தால், தைரியம் இருந்தால்
இந்தக் கருத்தையே முதல்வர் படிக்காமல், 7ஆம் தேதி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த அணைகள் கேரளாவுக்குச் சொந்தம் என்று நான்தான் கூறியதைப் போல என்மீது பாய்ந்து பிறாண்டியிருக்கிறார். இந்த நான்கு அணைகளும் கேரளாவுக்குச் சொந்தம் என்று ஒரு தடவைக்கு இரண்டு தடவை கூறியிருப்பது கேரள முதல்வர் உம்மன் சாண்டி. தைரியம் இருந்தால், தெம்பு இருந்தால், நியாயம் இருந்தால் முதல்வர் ஜெயலலிதா, உம்மன் சாண்டிக்குப் பதில் சொல்ல வேண்டுமே தவிர, என் மீது ஆத்திரப்பட்டு என்ன பயன்?

கேட்டது தப்பா...
கேரள முதல்வர் இப்படியெல்லாம் சொல்லியிருக்கிறாரே, இதற்கு தமிழ்நாடு பதில் சொல்ல வேண்டாமா என்றுதானே கேட்டிருந்தேன். அது தவறா? இப்போதாவது புரிகிறதா அரை வேக்காடு யார் என்பது? அரை வேக்காடுகூட இல்லை, தான் ஒரு அரைக்கால் வேக்காடு, கொதியே வராத வேக்காடு என்று அறிக்கை மூலம் நிரூபித்து இருப்பது ஜெயலலிதா என்பது ஊர்ஜிதம் ஆகிறதா அல்லவா? இதிலே எனக்கென்ன அரசியல் ஆதாயம்?

பாசாங்கு செய்பவர்களை எப்படி எழுப்புவது...
அடுத்து ஜெயலலிதா வழக்கம் போல, காவிரி நதி நீர்ப் பிரச்சினை, கச்சத் தீவுப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை என்று எப்போதும் அவர் என் மீது சாட்டுகின்ற குற்றச்சாட்டுகளையே திரும்பவும் தன் அறிக்கையில் எடுத்துக் கூறியிருக்கிறார். அந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் நான் திரும்பத் திரும்ப விளக்கம் அளித்து விட்டேன். அதையெல்லாம் திரும்ப மீண்டும் ஒரு முறை நான் எடுத்துக் கூற விரும்பவில்லை. தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல பாசாங்கு செய்பவர்களை எழுப்ப முடியுமா?

அறிந்தவர்கள் மறந்து விட மாட்டார்கள்
ஜெயலலிதா 29-6-2014 அன்று வெளியிட்ட அறிக்கையில், "நதி நீர் இணைப்பு குறித்த பொது நல வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு தீர்ப்பினை வழங்கியது"" என்று குறிப்பிட்டிருந்த காரணத்தால், 30-6-2014 அன்று நான் அளித்த பதிலில், "உச்ச நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பே கழக வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் 1983இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து, மேல் முறையீட்டினை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததன் விளைவாகத்தான் வந்தது என்பதை ஜெயலலிதா தன்னுடைய அறிக்கையிலே மறைத்து விட்டாலும், நதி நீர் இணைப்பு குறித்து அறிந்தவர்கள் மறந்து விட மாட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன்.

எப்படியோ ஒப்புக் கொண்டால் சரி
அதற்கு நேரடியாகப் பதில் கூற முடியாத ஜெயலலிதா, கே.எஸ். ராதாகிருஷ்ணன் தனிப்பட்ட முறையில் தாக்கல் செய்த வழக்கினை, தி.மு.க. வினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும் என்று கேட்டிருக்கிறார். எப்படியோ, அந்த வழக்கு அ.தி.மு.க.வினாலோ, ஜெயலலிதாவினாலோ தொடுக்கப்பட்ட வழக்கு அல்ல என்பதை ஜெயலலிதா ஒப்புக் கொண்டால் சரி!

புதுக் கண்டுபிடிப்பு
ராதாகிருஷ்ணன் வழக்குத் தொடுத்த போது தி.மு.க.வில் இல்லை என்று புதிய கண்டுபிடிப்பு ஒன்றையும் சொல்லியிருக்கிறார். அவர் அப்போது எந்தக் கட்சியில் இருந்தாலும் இப்போது தி.மு.க.வில் தானே இருக்கிறார், அதனால்தான் கழக வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் என்று என் அறிக்கையிலே குறிப்பிட்டிருந்தேன்.

பாவம் எழுதிக் கொடுத்தவர்கள்
ஜெயலலிதாவுக்காக அறிக்கை எழுதியவர்கள் ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகங்களையும், கட்டுரைகளையும் தேடித் தேடிப் படித்து, அதிலே என்னைப் பற்றி அவர் மாற்றுக் கட்சியிலே இருந்தபோது செய்த விமர்சனத்தை எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். பாவம்; ஒரு மாநில முதல்வரை அறிக்கை எழுதிக் கொடுத்தவர்கள் இப்படியெல்லாம் அவமானப்படுத்தியிருக்கக் கூடாது. ராதாகிருஷ்ணனின் கட்டுரையிலே கூட, "தமிழக முதலமைச்சர் கருணாநிதி டெல்லியைப் பார்த்து நதி நீர் இணைக்க வேண்டும் என்று சொல்கின்றார்" என்ற உண்மையைத்தான் வெளியிட்டு, நதி நீர் இணைக்க வேண்டுமென்று நான் மத்திய அரசைப் பார்த்து அப்போதே கோரிக்கை வைத்ததை ஊர்ஜிதம் செய்திருக்கிறார்.

அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார்
ஜெயலலிதா மீண்டும் தனது அறிக்கையில் நதி நீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றிட கருணாநிதி ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடவில்லை என்று சொல்லிவிட்டு, அவரே தன்னையும் அறியாமல் அவருடைய அறிக்கையிலே, நதி நீர் இணைப்புத் திட்டத்திற்காக நான் என்ன செய்தேன் என்பதையும் தெரிவித்திருக்கிறார். உதாரணமாக அவருடைய அறிக்கையில், பெண்ணையாற்றுடன் செய்யாற்றினை இணைக்கும் திட்டத்திற்கு நிதி உதவி பெறும் கோரிக்கை 2008ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு தமிழக அரசால் அனுப்பி வைக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார். 2008ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக நான் இருந்த போதுதான் அந்தக் கோரிக்கையே வைக்கப்பட்டது.

விரிவாக எடுத்துரைத்திருக்கிறேன்
நதி நீர் இணைப்புக்காக தி.மு. கழக ஆட்சியில் 2007-2008ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையிலேயே "இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங் களின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும், இறை யாண்மைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் நதிநீர்ப் பங்கீடு பிரச்சினைகள் உருவாவதைத் தடுத்திட முதலில் தீபகற்ப நதிகளையாவது இணைத்திட வேண்டும் என்ற கோரிக்கையை அவசர அவசியம் கருதி, உடனடியாக நிறைவேற்றும் பணி மத்திய அரசால் தொடங்கப் பெற இந்த அரசு தொடர்ந்து தீவிர முயற்சி மேற்கொள்ளும்"" என்று சுட்டிக்காட்டியதையொட்டி, நதிநீர் இணைப்பு பற்றி, மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளின் கவனத்தையும் ஈர்த்திடும் வகையில், டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டத்திலும் நான் விரிவாக எடுத்துரைத்திருக்கிறேன்.

இந்தியாவிலேயே முதல் முறையாக
நிதிநிலை அறிக்கையில் அறிவித்ததோடு நில்லாமல், வெள்ள அபாயத்தைத் தடுப்பதற்கும், வெள்ள நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுத்து, வறட்சிப் பகுதிகளுக்கு நீரை எடுத்துச் செல்வதற்கும், மாநிலத்திற்குள் பாயும் நதிகளை இணைக்கும் திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் தி.மு.க ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டது.

நதிகள் இணைப்புத் திட்டம்
திருச்சிக்கு அருகே மாயனூரில் உபரி நீரை வறண்ட மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்கான காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தின் கீழ், காவிரியின் குறுக்கே கட்டளையில் கதவணை கட்டும் பணிகள் 189 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனுமதிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்காக 369 கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. பெண்ணையாற்றுடன் செய்யாற்றை இணைக்கும் திட்டத்திற்கு 174 கோடி ரூபாய்க்கான கருத்துரு மத்திய அரசின் நீர்க்குழுமத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.

எப்படிப்பட்ட ஏமாற்றுத்தனம்
இந்த உண்மைகளையெல்லாம் அப்படியே மறைத்து விட்டு, நதி நீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற கருணாநிதி ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடவில்லை என்று கூறுவது எத்தகைய ஏமாற்றுத்தனம் என்பதை தமிழ்நாட்டு மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

வைக்கட்டும்.. வேண்டாம் என்று சொல்லவில்லை
வாதங்களை எடுத்து வைக்கட்டும், நான் வேண்டாமென்று கூறவில்லை. அரசியலிலே இருப்பவர்கள் தங்கள் தங்கள் வாதங்களை எடுத்து வைப்பதிலே தவறு இல்லை. ஆனால் முதலமைச்சர் பொறுப்பிலே இருப்பவருக்கு ஒரு நாகரிகம் வேண்டாமா? பண்பாடு வேண்டாமா? வேறு எந்த மாநிலத்திலாவது எந்த முதல் அமைச்சராவது இப்படியெல்லாம் வார்த்தைகளை வாரி இறைப்ப துண்டா? கேரள முதலமைச்சர் இப்படியெல்லாம் கூறியிருக்கிறாரே, இதற்கு தமிழக அரசு பதில் கூற வேண்டாமா என்று பொறுப்புடன் நான் கேட்டால், அவருக்குப் பதில் கூறுவதை விட்டு என்னை அரை வேக்காடு என்றும், வாங்கிக் கட்டிக் கொண்டேன் என்றும் ஒரு முதல்வர் பதவியில் இருந்து கொண்டு எழுதுவது அவருக்கு வேண்டுமானால் சிறப்பாகத் தெரியலாம். ஆனால் அதே பாணியில் பதில் கூறுவதற்கு எனக்கு வெட்கமாக இருக்கிறது!

குழாயடிச் சண்டைக்கு நான் தயாரில்லை
தந்தை பெரியாரோடும், பேரறிஞர் அண்ணா வோடும், மூதறிஞர் ராஜாஜியோடும், பெருந்தலைவர் காமராஜரோடும், பெரியவர் பக்தவத்சலத்தோடும், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தோடும், ஏன் எம்.ஜி.ஆரோடும், அகில இந்திய அளவிலேகூட அன்னை இந்திரா காந்தியோடும், சோனியா காந்தியோடும், மன்மோகன் சிங்கோடும் அரசியலை பண்பாட்டோடு நடத்திப் பழகி விட்டு, தற்போது குழாய் அடியிலே சண்டை போடுவதைப் போன்ற மொழியிலே பதிலளிக்க நான் தயாராக இல்லை.

உதிர்ந்த ரோமம் - தகர டப்பா
என்னை மாத்திரமல்ல; தமிழ்நாட்டுத் தலைவர்களை மாத்திரமல்ல; அகில இந்தியத் தலைவர்களையெல்லாம் ஜெயலலிதா எப்படியெல்லாம் விமர்சித்தார் என்பதை நாட்டு மக்கள் அறியமாட்டார்களா என்ன? நாவலர் நெடுஞ்செழியன் அவர்களையே "உதிர்ந்த ரோமம்" என்று ஜெயலலிதா விமர்சிக்கவில்லையா? அத்வானி அவர்களை "செலக்டிவ் அம்னீஷியா" என்று கூறவில்லையா? "செயல்படாத பிரதமர்" என்று நரசிம்மராவைப் பேசவில்லையா? ஆளுநராக இருந்த சென்னா ரெட்டி ஜெயலலிதாவிடம் தவறாக நடக்க முயன்றார் என்று சட்டசபையிலேயே தெரிவிக்கவில்லையா? கம்யூனிஸ்டுகள் உண்டியல் குலுக்குவதற்காகத்தான் "தகர டப்பா"வே கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரிவிக்கவில்லையா? இதெல்லாம் ஜெயலலிதாவுக்கு கை வந்த கலையாக இருக்கலாம்; என்னைப் பொறுத்தவரையில் நான் ஜெயலலிதாவுடன் இந்த அநாகரிக வார்த்தைப் போட்டிக்கு வரவிரும்பவில்லை.

தேவையில்லாமல் புழுதி வாரி இறைப்பதா...
கேரள முதல்வர் உம்மன் சாண்டி சொன்ன வார்த்தைகளை ஏற்க மறுத்து, தமிழ்நாட்டு மக்களுக்காக நான் வாதிட்டதற்காக - அதைப் புரிந்து கொள்ளும் சக்தியில்லாமல்; தேவையில்லாமல் ஜெயலலிதா என் மீது புழுதி வாரித் தூற்றியிருப்பது நியாயம்தானா என்பதை; இதைப் படித்து விட்டு நடுநிலையாளர்கள் சிந்தித்து தீர்ப்பு வழங்க வேண்டுகிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications