மத்திய அமைச்சர்களின் குற்றச்சாட்டிற்கு ஜெயலலிதாவே பதிலளித்திருக்க வேண்டாமா?- கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை: தமிழக முதல்வரை சந்திக்க இயலவில்லை என்கின்ற மத்திய அமைச்சர்களின் நேரடி குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஜெயலலிதாவே பதிலளிக்க வேண்டாமா என்று திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்த அவரது அறிக்கை:
"மத்திய மின் துறை அமைச்சர் பியுஷ் கோயல் டெல்லியில் 26-3-2016 அன்று பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, தமிழக மின் திட்டங்கள் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தன்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், மின் துறை அமைச்சரிடம் ஒரு முறை பேசிய போது, "அம்மாவிடம் கூறுகிறேன்" என்று சொன்னதாகவும், ஆனால் அதன் பின் பல மாதங்கள் ஆகியும் தமிழக அரசிடமிருந்து பதிலே வரவில்லை என்றும் பேசியிருந்தார். அதே அமைச்சர், ஏற்கனவே, 3-3-2016 அன்று தமிழக மின் உற்பத்தியை மேம்படுத்துவது குறித்து பேச்சு நடத்த முதல்வர் ஜெயலலிதா முன் வரவில்லை என்ற கருத்தையும், தமிழக மின் துறை அமைச்சரும் ஆலோசனை நடத்த முன் வரவில்லை என்ற கருத்தையும் தெரிவித்திருந்தார்.
மத்திய மின் துறை அமைச்சர் பியுஷ் கோயல் அவர்களைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்களும் முதல்வர் ஜெயலலிதாவை தானும் சந்திக்க முடிய வில்லை என்று குறிப்பிட்டார். மத்திய அமைச்சர்களின் குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எந்தப் பதிலும் விளக்கமும் கூறாமல் இரண்டு அமைச்சர்களை விட்டு அறிக்கைகள் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். அந்த அறிக்கைகளும், மத்திய அமைச்சர்களை வசைபாடும் அறிக்கைகளாக இருக்கிறதே தவிர, அவர்கள் நேரடியாகச் சாட்டிய குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறுவதாக இல்லை.
மத்திய மின் துறை அமைச்சர் பேசியதை அறிக்கையின் மூலம் நிதி அமைச்சர் மறுக்கிறார் என்றால், மத்திய அமைச்சர் தொடர்பு கொள்ளவே இல்லை என்று கூறத் தயாரா? மத்திய மின் துறை அமைச்சர் முதல்வரைச் சந்தித்து மாநில மின்சாரப் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டாரா இல்லையா? அவருக்கு ஏன் சந்திக்கும் வாய்ப்பு தரப்பட வில்லை? மத்திய அமைச்சர் தமிழகத்தின் நலன் கருதி அதன் திட்டங்களுக்காகத் தானே முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டார்.
அவருக்கு ஏன் நேரம் தரப்படவில்லை? இதற்கு நேரடியான பதில் என்ன? நிதியமைச்சர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் அதற்கு ஏதேனும் விளக்கம் இருக்கிறதா? "உப்பு இருக்கிறதா" என்று கேட்டால் "பப்பு இருக்கிறது" என்பதா பதில்? பட்டுக்கோட்டைக்கு வழி எது என்று கேட்டால், கொட்டைப்பாக்கு என்ன விலை என்றா சொல்வது?
மத்திய அமைச்சர்களின் குற்றச்சாட்டுகளையும் நடுநிலையாளர்கள் படிக்கட்டும் - அதற்கு தமிழகத்தின் இரண்டு மூத்த அமைச்சர்கள் கொடுத்த விளக்கத்தையும் படிக்கட்டும் - முடிவுக்கு வரட்டும். மத்திய அமைச்சர்களின் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானது என்றால், முதல்வரே விளக்கம் அளித்திருக்க மாட்டாரா என்ன? முதல்வரைப் பற்றி மத்திய அமைச்சர்களின் நேரடியான குற்றச்சாட்டுகளுக்கு முதல்வரே பதிலளித்திட முன்வருவது தானே முறை?
எப்படியோ அ.தி.மு.கவின் ஐந்தாண்டு கால ஆட்சியில் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக அ.தி.மு.க ஆட்சியினரும் திட்டம் வகுத்து எதுவும் செய்யவில்லை. மத்திய அரசு தன்னிச்சையாக மாநிலத்திற்கு உதவிட முன் வந்தும் அதையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது இந்த ஒரு நிகழ்வின் மூலம் நிரூபணமாகிறது அல்லவா" என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications