இடஒதுக்கீடு பெற பிற்பட்டோருக்கான உச்சவரம்பை உயர்த்த மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்
சென்னை: மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 27% இடஒதுக்கீடு பெற பிற்படுத்தப்பட்டோருக்கான ஆண்டு வருமான உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டின் பலனைப் பெற, நடைமுறையில் இருந்து வரும் வருமான வரம்பினை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்தி வந்துள்ளது. மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் ஓ.பி.சி. என்னும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.
இதற்கு ஓ.பி.சி. சான்றிதழ் பெறவேண்டுமானால், பெற்றோரின் ஆண்டு வருமானம் ஆறு இலட்சம் ரூபாய்க்குள் தான் இருக்க வேண்டும் என்று இதுவரை விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சூழலில் ஆண்டு வருமானம் ஆறு இலட்சம் ரூபாய் என்ற வரையறைக்குள் பெரும்பாலோர் வருவதில்லை. இதன் காரணமாக பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் அனைத்தையும் நிரப்ப முடிவதில்லை.
எனவே தான், 6-5-2015 அன்று நான் விடுத்த அறிக்கையில், "ஓ.பி.சி., என்று அழைக்கப்படும் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில், "கிரீமிலேயர்"உச்ச வரம்பை, தற்போதுள்ள ஆறு இலட்சம் ரூபாய் என்பதிலிருந்து, 10.50 இலட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான தேசியக் கமிஷன், வரவேற்கத்தக்க பரிந்துரை ஒன்றைச் செய்துள்ளது.
இந்தப் பரிந்துரையை மத்திய பா.ஜ.க. அரசு ஏற்றுக் கொண்டால், "இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த" பல்லாயிரம் பேருக்கு, மத்திய அரசின் வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் மேலும் கூடுதலாக இட ஒதுக்கீட்டுப் பலன்கள் கிடைக்கும் என்பதால், மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக முன் வந்து இந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று, இட ஒதுக்கீட்டிற்காகத் தொடர்ந்து பாடுபட்டு வரும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற முறையில் அதன் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்"" என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.
தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் காரணமாக 12-6-1990 அன்று பிரதமர் வி.பி. சிங் அனைத்து மாநில முதல் அமைச்சர்களுக்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் பற்றிக் கருத்துக்களைக் கேட்டு, அந்த மாத இறுதியிலேயே அதற்கு தமிழக முதலமைச்சராக இருந்த நான் பதில் எழுதி - அதைப்பற்றி பின்னர் பிரதமர் வி.பி. சிங் கூறும்போது, மத்திய அரசின் சார்பில் எழுதப்பட்ட கடிதத்திற்கு உடனடியாக பதில் எழுதிய மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான் என்று பாராட்டினார்.

7-8-1990 அன்று மத்திய அரசு நிறுவனங்களிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதன் காரணமாக பிரதமர் வி.பி. சிங் அவர்கள் "சமூக நீதிக் காவலர்" என்ற புகழ்ப் பெயரோடு வரலாற்றில் நிலை பெற்றிருக்கிறார்.
2004ஆம் ஆண்டில் மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைந்ததற்குப் பிறகு அப்போது மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த அருமை நண்பர் அர்ஜுன் சிங் அவர்கள் மூலமாகக் கோரிக்கை வைத்து, அவரும் தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டு, இதரப் பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வி நிலையங்களில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கான ஆணைகளைப் பெற்றுத் தந்தார். எனினும் நடைமுறையில் இருந்து வந்த "கிரீமிலேயர்" பிரிவினருக்கான வருமான வரம்பினை உயர்த்தி மேலும் பெருமளவுக்கு பிற்படுத்தப்பட்டோர் பயன் அடைவதற்கான வழிவகைகளைச் செய்ய வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து குரல் எழுப்பியும், தீர்மானம் நிறைவேற்றியும் வந்த போதிலும், அந்த வருமான வரம்பு பல ஆண்டுகளாக உயர்த்தப் படாமலே இருந்து வந்தது.
அந்த உச்ச வரம்பினைத் தான் அதாவது ஆறு இலட்சம் ரூபாய் என்பதிலிருந்து பத்தரை இலட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டுமென்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்தது.
இந்தப் பின்னணியில் தற்போது ஆண்டு வருமானம் 6 இலட்சம் ரூபாய் என்பதை 8 இலட்சம் ரூபாய் என்ற அளவில் உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்ட மிட்டுள்ளதாக செய்தி வந்திருக்கிறது. இது தொடர்பாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினர் அசோக் சைனி அவர்கள், வருமான வரம்பினை 15 இலட்சம் ரூபாய் அளவுக்கு உயர்த்த வேண்டுமென்று சிபாரிசு செய்துள்ளதாகக் கூறியிருக்கிறார்.
எனவே பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான பா..ஜ.க. அரசு, இந்தியாவில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்னும் நோக்கில், அவர்களின் ஆண்டு வருமானம் 6 இலட்சம் ரூபாய் என்பதை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினர் பரிந்துரை செய்துள்ள 15 இலட்சம் ரூபாய் என்ற அளவுக்கோ அல்லது குறைந்த பட்சம் தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையம் கடந்த ஆண்டு பரிந்துரை செய்த 10.50 இலட்சம் ரூபாய் அளவுக்கோ உயர்த்தி அறிவிக்க வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தி வேண்டுகிறேன்!
இவ்வாறு கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications