For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிஞ்சுக் குழந்தைகள் நெஞ்சில் அறிவுப் பயிர் செய்திடுங்கள்.. ஆசிரியர்களுக்கு கருணாநிதி அழைப்பு

Google Oneindia Tamil News

சென்னை: வளரும் பிஞ்சுக் குழந்தைகள் நெஞ்சில் அறிவு வளர்ச்சிப் பயிர் செய்திடும் பொறுப்பில் உள்ள ஆசிரியப் பெருமக்கள் நாட்டுப் பற்று உணர்வை வளர்த்திட வேண்டும். தமிழ் மொழிப்பற்று உணர்வை வளர்த்திட வேண்டும். தமிழகத்தின் நலனை தமிழ்ச் சமுதாயத்தின் தன்மானத்தைக் காக்கும் பொறுப் பினையும் மேற்கொண்டிட வேண்டும் என்பதை எனது வேண்டுகோளாகத் தெரிவித்து; தமிழக ஆசிரியப் பெருமக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், எனது "ஆசிரியர் நாள்" நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

நாளை செப்டம்பர் 5, ஆசிரியர்கள் தினம். இதையொட்டி திமுக தலைவர் கருணாநிதி ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் வாழ்த்துச் செய்தி...

அறிவாற்றல் கொண்ட எஸ்.ராதாகிருஷ்ணன்

அறிவாற்றல் கொண்ட எஸ்.ராதாகிருஷ்ணன்

ஆசிரியப் பணிபுரிந்து, அறிவாற்றலால் உயர்ந்து, தம் சான்றாண்மைக் குணங்களால் சிறந்து, சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவராகவும், பின்னர் இரண்டாவது குடியரசுத் தலைவராகவும் விளங்கிப் புகழ் படைத்தவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன். அவர்தம் பிறந்த நாள் செப்டம்பர் 5-ம் நாள் நாட்டின், "ஆசிரியர் நாள்" என ஆசிரியப் பெருமக்களின் அரிய தொண்டுகளைப் போற்றி ஆண்டுதோறும் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

நல்லாசிரியர் விருது

நல்லாசிரியர் விருது

இந்நன்னாளில் அடுத்த தலைமுறை மக்களை அறிவிலும், ஆற்றலிலும், செயல்பாட்டுத் திறனிலும், சீரிய பண்பாட்டு உணர்விலும் சிறந்தவர்களாக உருவாக்கிடும் திருப்பணியில் வாழ்நாள் முழுதும் தொண்டு களாற்றிடும் பெருமைக்குரிய ஆசிரியப் பெருமக்களுக்கு அரசு சார்பில் "டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் விருது" வழங்கிப் பெருமைப் படுத்தப்படுகிறது.

தொகையை உயர்த்தியது நாங்கள்தான்

தொகையை உயர்த்தியது நாங்கள்தான்

ஆசிரியர் சமுதாயம் முழுதும் மகிழும் வகையில், "நல்லாசிரியர் விருது" என வழங்கப்பட்ட விருதின் பெயரை, 1997-ல் "டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் விருது" என்றும், விருதுக்குரிய பரிசுத் தொகை ரூ.500 என்பதை 1989-ல் ரூ.1,000 என்றும், 1997-ல் ரூ.2,000 என்றும், பின் 2008-ல் ரூ.5,000 என்றும் உயர்த்தியது திராவிட முன்னேற்றக் கழக அரசே என்பதை இவ்வேளையில் நினைவுபடுத்துகிறேன்.

ஆசிரியர்கள் ஏங்கினால் வகுப்பறைகள் தேங்கும்

ஆசிரியர்கள் ஏங்கினால் வகுப்பறைகள் தேங்கும்

"ஆசிரியர்கள் ஏங்கினால் வகுப்பறைகள் தேங்கும்" என்று கூறிய பேரறிஞர் அண்ணாவின் மணிமொழியை இதயத்தில் தாங்கி, ஆசிரியர் சமுதாயத்திற்கு அளவிலாச் சலுகைகள் பலவற்றை வழங்கியது திராவிட முன்னேற்றக் கழக அரசு. 1959-ல் 5 கோடி ரூபாய்ச் செலவில் முதலாவது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப் படுத்தப்பட்டதற்கு மாறாக; 1967-ல் கழக அரசு அமைந்ததைத் தொடர்ந்து அண்ணாவிற்குப் பின் நான் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றதும் 1965-ல் அமைக்கப்பட்டிருக்க வேண்டிய இரண்டாவது ஊதியக் குழுவினை 4.9.1969-ல் அமைத்து, அதன் பரிந்துரைகளை 2.10.1970 முதல் ஆண்டுக்கு 21 கோடி ரூபாய்ச் செலவில் நடைமுறைப்படுத்தினேன்.

ஊதியக் குழு பரிந்துரைகள்

ஊதியக் குழு பரிந்துரைகள்

அடுத்து, 1989-ல் கழகம் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தபோது, மாநில அரசின் ஐந்தாவது ஊதியக்குழு அமைத்து- மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்குவது உட்பட அக்குழு அளித்த பல்வேறு பரிந்துரைகளை ஏற்று 1.6.1988 முதல் ஆண்டுக்கு 430 கோடி ரூபாய்ச் செலவிலும்; 1996-ல் கழகம் நான்காவது முறையாக ஆட்சிக்கு வந்தபோது மத்திய அரசின் ஐந்தாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் கழக அரசு நியமித்த ஊதியக்குழு அளித்த பரிந்துரைகளை ஏற்று; 1.1.1996 முதல் ஆண்டுக்கு 1230 கோடி ரூபாய்ச் செலவிலும்; 2006-ல் கழகம் ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வந்த போது மத்திய அரசின் ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் கழக அரசு நியமித்த ஊதியக்குழு அளித்த பரிந்துரைகளை ஏற்று; 1.1.2006 முதல் ஆண்டுக்கு 5,155 கோடியே 79 லட்ச ரூபாய் கூடுதல் செலவிலும் என 19 ஆண்டுகால முதல்- அமைச்சர் பொறுப்பில் நான்கு ஊதியக் குழுக்களை அமைத்து; அவற்றின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி ஆசிரியர், அரசு ஊழியர் குடும்பங்களின் சமூக, பொருளாதார நிலைகளை உயர்த்தி, அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட வழிவகுத்தவன் நான் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.

தன்மான உணர்வுகள்

தன்மான உணர்வுகள்

தந்தை பெரியாருக்கும், பேரறிஞர் அண்ணாவிற்கும், மறைமலை அடிகளார் உள்ளிட்ட பல தமிழ் சான்றோர்களும் ஊட்டிய தன்மான உணர்வுகளால் தமிழக நலன்கருதி தமிழ் மொழி, இனச் சிந்தனைகள் செழித்தது. மறைந்து கொண்டிருந்த தமிழ் மொழியை மீட்கும் வகையில் பல்லாண்டு காலம் போரிட்டு உயிர்ப்பலி தந்து தமிழகத்தில் நடைமுறையில் இருந்த "ஆகாஷவாணி" என்பதை "வானொலி" என்றும்; "பிராந்திய செய்திகள்" என்பதை "மாநிலச் செய்திகள்" என்றும்; "லோக்சபா" என்பதை "மக்களவை" என்றும்; "கனம் மந்திரி" என்பதை "அமைச்சர்" என்றும்; "சட்டசபை" என்பதை "சட்டமன்றம்" என்றும் இவைபோல் வடசொல் ஆதிக்கத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான தமிழ்ச் சொற்களை மீட்டெடுத்து, புழக்கத்தில் கொண்டு வந்து எல்லாம் தமிழாகி படிப்படியாக வடசொல்லாதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேசியம் என்ற பெயரில், "ஆசிரியர் நாள் விழா" என நாம் அழைத்து வரும் தமிழ்ச் சொற்றொடர் மதிப்பிழக்கும் வகையில், "குரு உத்சவ்" எனும் வடசொல் தமிழகப் பள்ளிகளில் புகுத்தப்படுகின்ற கொடுமை தற்போது அரங்கேற்றப்படுகிறது. இதை சாதாரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது.

பிஞ்சுகளின் நெஞ்சில் அறிவு பயிர் செய்யுங்கள்

பிஞ்சுகளின் நெஞ்சில் அறிவு பயிர் செய்யுங்கள்

இந்நிலையில் வளரும் பிஞ்சுக் குழந்தைகள் நெஞ்சில் அறிவு வளர்ச்சிப் பயிர் செய்திடும் பொறுப்பில் உள்ள ஆசிரியப் பெருமக்கள் நாட்டுப் பற்று உணர்வை வளர்த்திட வேண்டும். தமிழ் மொழிப்பற்று உணர்வை வளர்த்திட வேண்டும். தமிழகத்தின் நலனை தமிழ்ச் சமுதாயத்தின் தன்மானத்தைக் காக்கும் பொறுப் பினையும் மேற்கொண்டிட வேண்டும் என்பதை எனது வேண்டுகோளாகத் தெரிவித்து; தமிழக ஆசிரியப் பெருமக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், எனது "ஆசிரியர் நாள்" நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
DMK Karunanidhi has greeted the teachers on Teachers' day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X