மு.க. ஸ்டாலின் அறையவே இல்லை.. இமேஜை கெடுக்க சதி: நடிகை குஷ்பு திடீர் 'சப்போர்ட்'
சென்னை: மெட்ரோ ரயிலில் பயணியை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அறையவே இல்லை.. அவரது இமேஜை கெடுக்கும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்பு திடீரென ஆதரவளித்துள்ளார்.
சென்னை மெட்டோ ரயிலில் நேற்று பயணம் செய்த மு.க.ஸ்டாலின் பயணி ஒருவரை அடித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில் ஸ்டாலினுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக விளக்கம் அளித்த ஸ்டாலினும் தாம் பயணியை அடிக்கவில்லை என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நடிகை குஷ்பு கூறியுள்ளதாவது:
அந்த பயணியை ஸ்டாலின் அறையவில்லை...ஜஸ்ட் தள்ளிதான் விட்டார்.. இது தொடர்பாக ஒரு பகுதி வீடியோதான் வைரலாகப் போய்க் கொண்டிருக்கிறது.. மு.க.ஸ்டாலினின் இமேஜை கெடுப்பதற்கான சதி இது. ஸ்டாலின் அந்த நபரை தள்ளிதான் விட்டிருக்கலாமே தவிர பொதுவாக இப்படி நடந்து கொள்ளமாட்டார்... ஒட்டுமொத்த வீடியோவையும் பார்த்துவிட்டுதான் முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.
தி.மு.க.வில் குஷ்பு இருந்த போது மு.க.ஸ்டாலினின் தலைமையை ஏற்க மறுத்து பேட்டி அளித்ததால் தாக்குதலுக்குள்ளாகினார். பின்னர் தி.மு.க.வைவிட்டு வெளியேறி காங்கிரஸில் ஐக்கியமானார் குஷ்பு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications