2 வாரத்தில் கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை துவக்கம்: 15 நிமிடத்திற்கு ஒரு ரயில்
சென்னை: சென்னை கோயம்பேடு-ஆலந்தூர் இடையே ஜூலை முதல் வாரத்தில் மெட்ரோ ரயில் சேவை துவங்கும் என்றும், 15 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு-ஆலந்தூர் இடையே நடந்து வந்த மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடைய உள்ளது. இதையடுத்து அந்த மார்க்கத்தில் ஜூலை முதல் வாரத்தில் மெட்ரோல் ரயில் சேவை துவங்க உள்ளது. மெட்ரோ ரயில் சேவைக்காக சென்னை கோயம்பேட்டில் ரூ.198.10 கோடி செலவில் 70 ஏக்கரில் மெட்ரோ ரயில் இயக்க கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மையத்தின் செயல்பாடு மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள மெட்ரோ ரயில் பணிமனை ஆகியவற்றை அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு சுற்றிக்காண்பித்து விளக்கினர். பணிமனை வளாகத்தில் ரயில்கள் நிறுத்தும் இடம், பழுதுபார்க்கும் இடம், நிர்வாக அலுவலகம், ரயில் கருவிகள் வைக்கும் அறை, ரயில்களை சுத்தம் செய்யும் இடம், 110 கிலோவாட் சக்தி கொண்ட துணை மின் நிலையம் ஆகியவை உள்ளன.

மெட்ரோ ரயில் பணியாளர்களுக்கு உணவகங்கள் மற்றும் ஓய்வு எடுக்கும் அறை ஆகியவையும் உள்ளன. இந்த வளாகத்தில் தற்போது 4 பெட்டிகள் உள்ள 25 ரயில்கள் நிற்கின்றன. ரயில் என்ஜின் டிரைவர்களை தொடர்பு கொள்ளவும், தேவைப்படும் போது ரயிலை நிறுத்தக்கூடிய வசதியும் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ளது.
தினமும் காலை 5 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை 19 மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் அலுவலகங்களுக்கு செல்லும், வீடு திரும்பும் நேரங்களில் 4.5 நிமிடத்திற்கு ஒரு ரயிலும், மற்ற நேரத்தில் 10 முதல் 15 நிமிடத்திற்கு ஒரு ரயிலும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

துவக்கத்தில் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ரயில்கள் இயக்கப்படும். 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட மெட்ரோ ரயில்களை சராசரியாக 34 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க உள்ளனர். முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 9 ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் இடையேயான 10.1 கிலோ மீட்டர் தூரத்தை ரயில் 18 நிமிடங்களில் கடக்கும். ரயில் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் 30 வினாடிகள் நிற்கும். மெட்ரோ ரயில் ஒவ்வொன்றிலும் 176 இருக்கைகள் உள்ளது.












Click it and Unblock the Notifications