'கெஜ்ரிவால்' போல அரசியல் களத்தில் குதிப்பா?: 'கூடங்குளம்' உதயகுமாரன் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

Kudankulam SP Udayakumaran emerges likely Kejriwal?
திருநெல்வேலி: டெல்லியை மிரள வைத்த அர்விந்த் கெஜ்ரிவால் போல தமிழக அரசியலில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுத் தலைவர் சுப. உதயகுமாரன் குதிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் அரசியல் குதிப்பது குறித்து சுப. உதயகுமாரன் நீண்ட விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சுப. உதயகுமாரன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் "அரசியலுக்கு வா, கட்சித் துவங்கு, தேர்தலில் நில்!" என்ற தலைப்பில் பதிவு செய்துள்ள அறிக்கை விவரம்:

எதிர்மறை உணர்வுகளோடு துவண்டுபோய்க் கிடந்த நம் நாட்டில், திடீரென ஓர் அரசியல் நம்பிக்கையும், உற்சாகமும் பீறிட்டுக் கிளம்பியிருக்கின்றன. அதற்கு காரணம், தோழர் அர்விந்த் கேஜ்ரிவாலின் தன்னம்பிக்கை, மூன்று முறை முதல்வராக இருந்தவரோடு மோதி முறியடித்த தைரியம், சாதாரண மக்களுக்கு அவரதுக் கட்சியின் வெற்றி கொடுக்கும் அசாதாரண நம்பிக்கை போன்றவைதான்.

இந்த புதிய உற்சாகத்தால், நேற்றிலிருந்து ஏராளமான குறுஞ்செய்திகளும், மின்னஞ்சல்களும், முகநூல் தகவல்களும், தொலைபேசி அழைப்புக்களும் வந்த வண்ணமுள்ளன. "அரசியலுக்கு வா, கட்சித் துவங்கு, தேர்தலில் நில்" என்றெல்லாம் பலரும் கடுமையான அழுத்தம் கொடுக்கிறார்கள்.

ஆனால் திடுதிப்பென்று முடிவு எடுக்கும் விடயங்களல்ல இவை. "எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு" என்பதுதான் வள்ளுவம்.

என்னைப் பொறுத்தவரை நான் தெளிவாக, உறுதியாக இருக்கிறேன்:

[1] கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட கடலோர மக்களின், உட்பகுதி மக்களின் வேலைக்காரன் நான். எனக்கும், என் தோழர்களுக்கும் அவர்கள் முழு நம்பிக்கையோடு ஒரு வேலை தந்திருக்கிறார்கள். "இதனை இதனால் இவ[ர்] முடிக்கும் என்றாய்ந்து அதனை அவ[ர்]கண் விடல்" என்றுத் தெளிந்து ஒரு பெரும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள். அது கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடுவது.

[2] நான் அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இயங்குகிறேன். என்னுடன் பணியாற்றுகிறவர்களின், எங்கள் மக்களின், ஒப்புதலின்றி, ஒத்துழைப்பின்றி என்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது, கூடாது.

[3] எங்களுடைய இந்த மக்கள் பணியில் அனைத்துத் தரப்பு மக்களின், இயக்கங்களின், கட்சிகளின் ஆதரவைக் கோரிப் பெற்றிருக்கிறோம். இந்தியாவின் பல பகுதிகளிலுள்ள ஏராளமான நண்பர்கள் பல்வேறு வழிகளில் எங்களுக்கு, மக்களுக்கு உதவி வருகிறார்கள்.

[4] மேற்குறிப்பிட்ட மக்கள், தோழர்கள் அத்தனை பேரின் உழைப்பை, உணர்வுகளை, அர்ப்பணிப்பை, தியாகத்தை உதாசீனப்படுத்திவிட்டு, உதறித் தள்ளிவிட்டு, நான்/நாங்கள் இன்னொரு வேலையில் குதிக்க முடியாது, கூடாது.

[5] கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பல குளறுபடிகள், கோளாறுகள் இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டி, உச்சநீதிமன்றத்திலும், தில்லி உயர்நீதி மன்றத்திலும் வழக்குகள் நடத்திக் கொண்டிருக்கிறோம். கூடங்குளம் திட்டத்தில் நடக்கும் பல மோசடிகளைத் தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம். எதிர்வரும் டிசம்பர் 21, 2013 அன்று "அணுத் தீமையற்ற தமிழக நாள்" எனும் நிகழ்வை அனுசரிக்கிறோம். சனவரி 4-5, 2014 நாட்களில் "இந்தியாவை அணுக் காலனியாக்குவதை எதிர்கொள்வது எப்படி?" என்பது பற்றிய தேசிய மாநாட்டை இடிந்தகரையில் நடத்துகிறோம். மக்களோடு நின்று போராடிக் கொண்டிருக்கிறோம்.

[6] இந்த நிலையில் நாங்கள் அரசியல் களத்துக்குள் குதிப்பதைவிட, அரசியல் களத்தை எங்களுக்கு சாதகமாக்க முடியுமா என்றுப் பார்ப்பதுதான் உசிதமானது. எனவே தமிழகத்திலுள்ள கட்சிகளை, மக்கள் இயக்கங்களை "ஆபத்தான ஆறு, ஆதரவான நூறு" என்று வகைப்படுத்தி, ஆதரவானவர்களை ஒன்று திரட்டி, எங்களுக்காக அரசியல் செய்ய, தேர்தலில் சேர்ந்துப் போட்டியிட, எங்கள் குறிக்கோளை அடைய உதவுங்கள் என்றுக் கேட்கிறோம், சில முயற்சிகள் எடுக்கிறோம்.

[7] அதற்கான வாய்ப்புக்கள் கைகூடினால், மகிழ்ந்து ஏற்றுக்கொள்வோம். அந்த கட்சிகளுக்கு, இயக்கங்களுக்கு ஆதரவளிப்போம், அவர்களின் வெற்றிக்காக உழைப்போம். ஒருசில வாரங்களில் அல்லது மாதங்களில் அரசியல் நிலைமை தெளிவாகத் தெரியவரும்.

[8] ஒருவேளை அனைவரும் தன்னலத்தை மட்டுமே கருத்திற் கொண்டு, தமிழ் மக்களை தவிக்கவிட்டுச் சென்றால்? கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினை பற்றிப் பேச மறுத்தால்? "அணுத் தீமையற்ற தமிழகம்" உருவாக்குவதற்கு உதவத் தவறினால்?

போராடும் மக்களோடு, சமுதாயத் தலைவர்களோடு, ஆதரவாளர்களோடு, தமிழ் மக்களோடு கலந்தாலோசித்து, என்ன செய்யலாம் என்று முடிவெடுப்போம். அது உங்களையும் இணைத்துக் கொண்ட, சனநாயகம் தோய்ந்த, திறந்தவெளித்தன்மை கொண்ட ஒரு கூட்டு முடிவாகத்தானிருக்கும்.

வணக்கம்.

சுப. உதயகுமாரன்
இடிந்தகரை
டிசம்பர் 10, 2013
(மனித உரிமை நாள்)

இவ்வாறு சுப. உதயகுமாரன் தமது அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+