கொட்டும் கனமழை! குற்றாலம் அருவிகளில் சீறி பாய்ந்த வெள்ளம்! உடனே ஸ்பாட்டிற்கு வந்த போலீஸ்! என்னாச்சு
தென்காசி: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக இன்று தென்தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. கனமழை காரணமாக ஏற்கனவே தென்காசியில் உள்ள குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்கு வெள்ளம் சீறி பாய்ந்தது. இது தொடர்பான பதறவைக்கும் காட்சிகள் இப்போது வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெஞ்சல் புயல் காரணமாகக் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டது.

வானிலை மையம்: இதற்கிடையே இப்போது வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஏற்பட்டு இருக்கிறது. இது நேற்று முன்தினம் இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது. தொடர்ந்து இது நேற்றைய தினம் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவியது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுக்குறைந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும் என்று வானிலை மையம் கூறியிருந்தது.
இதன் காரணமாகத் தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு நேற்று வியாழக்கிழமை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக நேற்றைய தினம் தென் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் நாள் முழுக்க கனமழை கொட்டியது. இதனால் அங்குப் பல இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
குற்றால அருவி: இந்த கனமழையால் தென்காசியில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குற்றால அருவியில் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி கார்த்திகை மாதம் என்பதால் ஐயப்ப பக்தர்கள் பலரும் குற்றால அருவியில் குளிக்கத் தினசரி வந்தனர். இந்தச் சூழலில் தான் கனமழை எச்சரிக்கையால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணியும் நடந்தது.
தென்காசியில் கொட்டிய இந்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வெள்ளம் சீரி பாய்ந்தது. இது தொடர்பான பதற வைக்கும் காட்சிகள் இப்போது வெளியாகியுள்ளது.
ஷாக் வீடியோ: குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவியில் மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட இந்த காட்டாற்று வெள்ளம் போல நீர் அங்குள்ள பாலங்களுக்கு அருகே பாய்ந்து செல்கிறது. மேலும், அங்கு அருகே அமைக்கப்பட்டு இருந்த கடைகளிலும் கூட வெள்ள நீர் புகுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகிப் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பாட்டில் போலீஸ்: வெள்ளம் மிக மோசமாக இருக்கும் நிலையில், அங்கு யாரும் சென்றுவிடாமல் இருக்க போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் தீவிர கண்காணிப்பில் இறங்கியுள்ளனர். தென்காசி மாவட்டத்தின் நேற்று காலை முதலே கனமழை கொட்டி வரும் நிலையில், இரவு 9 மணி வரை பதிவான மழை விவரங்கள் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாகத் தென்காசி நகரப் பகுதியில் 82 மிமீ மழை பதிவாகியிருக்கிறது.
தொடர்ந்து செங்கோட்டைப் பகுதியில் 70 மிமீ மழையும், குண்டாறு அணைப்பகுதியில் 68 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல ராமாநதி அணைப்பகுதியில் 62 மிமீ மழையும், சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதியில் 40 மிமீ மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நேற்று அங்கு 400 மிமீ மேல் மழைப் பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications