குளத்தில் விழுந்து மூழ்கிய குழந்தைகள்;துக்கத்தில் தந்தையும் தற்கொலை! கலங்க வைத்த கடைசி நிமிட படங்கள்
திருப்பத்தூர் : ஆம்பூர் அருகே முருகன் கோவில் மலை மீது உள்ள குளத்தில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழந்தன. துயரத்தில் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே உயிரிழக்கும் முன் கணவர் விஷத்தை தட்டிவிட்டதால் மனைவி மட்டும் உயிருடன் உள்ளார். கவனக்குறைவால் 24 மணி நேரத்தில் குடும்பமே சிதைந்து போனது. மனதை உலுக்கும் கடைசிப் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகேயுள்ள கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகேஸ்வரன். இவரின் மனைவி மீனாட்சி. இவர்களுக்கு 8 வயதில் ஜஸ்வந்த் என்ற மகனும், 6 வயதில் ஹரிப்ரீத்தா என்ற மகளும் இருந்தனர்.
கல்லூரிலுள்ள அரசுப் பள்ளியில் ஜஸ்வந்த் நான்காம் வகுப்பும், ஹரிப்ரீத்தா இரண்டாம் வகுப்பும் படித்து வந்தனர். இந்தநிலையில், திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே கடாம்பூர் கிராமத்திலுள்ள மாமியார் வீட்டிற்கு குடும்பத்துடன் வந்துள்ளார்.

குழந்தைகளுடன் ஜாலி
ஆம்பூர் மலைப்பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு நேற்று முன்தினம்(வெள்ளிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி பண்டிகை விடுமுறை நாள் என்பதால் தனது இரு குழந்தைகளை அழைத்துகொண்டு சென்றுள்ளார். மலையில் ஆங்காங்கே குழந்தைகளை நிற்கவைத்து செல்போனில் போட்டோ எடுத்த லோகேஸ்வரன் பின்னர் அங்குள்ள குளத்தின் அருகிலிருக்கும் பாறை மீது படுத்திருக்கிறார்.

நீரில் மூழ்கினர்
அப்போது அவரது மகன் ஜஸ்வந்த் மற்றும் அவரது சகோதரி ஹரி பிரீத்தா ஆகியோர் அங்கு உள்ள குளத்தில் மீன் பிடித்துகொண்டு விளையாடி கொண்டிருந்துள்ளனர். விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ஹரி பிரீத்தா நீரில் மூழ்கியதால் அவரை காப்பாற்ற அவரது அண்ணன் ஜஸ்வந்த் முயற்சித்துள்ளார். இருவரும் குளத்தில் மூழ்கி உள்ளனர்.

காப்பாற்ற முடியவில்லை
இதை அறிந்த அவரது தந்தை லோகேஸ்வரன் குளத்தில் குதித்து குழந்தைகளை காப்பாற்ற முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. ஆழமான பகுதி என்பதால் குழந்தைகளை அவரால் காப்பாற்ற முடியவில்லை. கதறி அழுதார். உதவிக்கும் ஆளில்லை. கதறி அழுது கொண்டிருந்தார்

உடல்கள் மீட்பு
இதையடுத்து அங்கிருந்த காவலர் ஒருவர் உடனடியாக உமராபாத் காவல்துறையினருக்கும் மற்றும் ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தார். அதன் பேரில் விரைந்து சென்ற காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் குளத்தில் மூழ்கிய இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டு சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்பு ஜஸ்வந்த் மற்றும் ஹரி ப்ரீத்தா இருவரது உடலையும் மீட்டனர்.

பிரேத பரிசோதனை
பின்னர் மலைப்பகுதியில் இருந்து சடலத்தை எடுத்து வருவதற்கு யாரும் இல்லாததால் காவல் உதவி ஆய்வாளர் காந்தி ஹரி பிரீத்தா வின் உடலை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் தோள் மீது சுமந்து வந்து ஆம்புலன்சில் வைத்தார் மற்றொரு சடலத்தை காவலர்களும் அங்குள்ள சிலருடன் இணைந்து டோலி கட்டி தூக்கி வந்தனர். பின்னர் 2 சடலத்தையும் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தந்தை தற்கொலை
தன்னுடன் செல்பி எடுத்து கொண்டும் புகைப்படங்கள் எடுத்து கொண்டு ஆனந்தமாய் விளையாடிய 2 குழந்தைகளும் உயிரிழந்ததை குழந்தைகளின் தந்தையான லோகேஸ்வரனால் தாங்கி கொள்ள முடியவில்லை. இதேபோல் குழந்தையின் தாயான மீனாட்சியும் பெரும் துக்கத்தில் இருந்தனர். குழந்தைகளை கொன்றுவிட்டதாக குற்ற உணர்ச்சியில் நொறுங்கிப்போன அவர்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இதன்படி ஆம்பூர் ரயில் நிலையம் வந்தவர்கள் அங்கிருந்த கடையில் குளிர்பானம் வாங்கி குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்தனர். விஷம் கலந்த குளிர்பானத்தை லோகேஸ்வரன் குடித்த பின்பு மீனாட்சியும் வாங்கிக் குடிக்க முயன்றுள்ளார்.

தாய் கதறல்
அப்போது, லோகேஸ்வரன் பாட்டிலை திடீரென தட்டிவிட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த மீனாட்சி விஷம் குடித்த கணவரை காப்பாற்றக் கோரி கூச்சலிட்டார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். இந்தச் சம்பவம், ஆம்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடைய குழந்தைகள் மற்றும் பெற்றோரின் கடைசி புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படங்கள் காண்போரை கலங்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications