செங்கோட்டையில் சிறுத்தை புலி தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி
செங்கோட்டையில் சிறுத்தை புலி தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை: செங்கோட்டையில் செல்லத்துறை என்ற விவசாயி சிறுத்தைப் புலி தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம், செங்கோட்டை பண்பொழி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா (எ) செல்லத்துரை. இவர் விவசாயம் செய்து வருகிறார். தேன் பொத்தை கிராமம் கடுவா பாரை பகுதியில் இவருக்கு 2 ஏக்கர் நிலம் உள்ளது.

இந்நிலையில் தனது நிலத்தினுள், விலங்குகள் புகுவதை தடுக்க வேலியில் துணி கட்டுவதற்காக புதன்கிழமை காலையில் தோட்டத்துக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது குடும்பத்தினர் நேற்று காலை தோட்டத்துக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு, விவசாய நிலத்தில் இருந்த வேலியில் ரத்த காயங்களுடன் செல்லத்துரை இறந்துகிடந்தார்.
பின்னர் செங்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார், வனவிலங்கு தாக்கியதால்தான் செல்லத்துறை இறந்தார் என்பதை உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வன விலங்குகள் தாக்குதல் காரணமாக கால்நடைகள் கொல்லப்பட்டு வந்த நிலையில், விவசாயி ஒருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications