அரக்கோணத்தில் இருந்து நாளை முதல் 2 நாட்களுக்கு பயணிகள் விமானம் இயக்கம்!!
சென்னை: கனமழை வெள்ளத்தால் சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில் அரக்கோணம் கடற்படை விமான தளத்தில் இருந்து நாளை முதல் 2 நாட்களுக்கு தற்காலிகமாக பயணிகள் விமானம் இயக்கப்பட உள்ளது.
கனமழை வெள்ளம் சென்னை விமான நிலையத்தையும் விட்டுவைக்கவில்லை. சென்னை விமான நிலையம் நேற்று மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 6-ந் தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டு அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

ஏற்கனவே ரயில், சாலை போக்குவரத்தை இழந்த சென்னை மாநகரம் விமான சேவையையும் இழந்து தனித் தீவான. இதனால் கடந்த 2 நாட்களாக ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையத்தில் முடங்கியுள்ளனர்.
இந்நிலையில் அரக்கோணம் கடற்படை விமான தளம் தற்காலிக பயணிகள் விமான நிலையமாக இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏர் இந்தியா விமானங்கள் சோதனை முயற்சியாக நேற்று அங்கு தரை இறக்கப்பட்டது.
இதனிடையே பயணிகள் விமான சேவை நாளை முதல் 2 நாட்களுக்கு அரக்கோணத்தில் இருந்து நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாளையும் நாளை மறுநாளும் 2 நாட்களுக்கு நாள்தோறும் 6 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இந்த விமானங்களில் ரூ1,000 முதல் ரூ2,000வரை கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது.
சென்னை விமான நிலையத்தில் வெள்ளம் வடிந்து நிலைமை சீரடையாவிட்டால் மீண்டும் அரக்கோணத்தில் இருந்து பயணிகள் விமான சேவை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications