"சாராய ராணி" மகேஸ்வரி கைது... ரூ. 25 லட்சம் எரிசாராயம் பறிமுதல்!
வேலூர்: ரூ. 25 லட்சம் மதிப்பிலான எரிசாராயம் கடத்திய வழக்கில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாராய விற்பனையில் தொடர்புடைய பிரபல சாராய வியாபாரி என்பது தெரியவந்துள்ளது.
வாணியம்பாடி நேதாஜிநகரில் வசிப்பவர் மகேஸ்வரி, 45, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து எரிசாராயம் கடத்தி வந்து, கள்ளச்சாராயம் தயாரித்து, சென்னை, திருவள்ளூர், தாம்பரம் ஆகிய பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக விற்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 15 தினங்களாக அவர் கள்ள சாராயம் காய்ச்சும் பம்ப் செட், மலையடிவாரம், வயல்காடு உள்ளிட்ட பகுதிகளில் சோதனையிட்ட போலீசார் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 500 கேன் எரிசாராயத்தை கைப்பற்றினர்.

போலீசார் தேடுவதை அறிந்த மகேஸ்வரி தலைமறைவானார். ஆலங்காயம் காட்டு பகுதியில் ஒளிந்திருந்த அவர் இன்று அதிகாலை வாணியம்பாடி புறப்பட்டு செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வேப்பங்கனேரி அருகே மறைந்திருந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இவர் மீது 17க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒருமுறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications