முஸ்லிம் மக்கள் தொகை அதிகமுள்ள டாப் 5 மாநிலங்கள் இவைதான்.. பாஜக போடும் கணக்கு!
சென்னை: லோக்சபா தேர்தல் 2024, ஏழு கட்டங்களில் ஆறு கட்டங்கள் முடிவடைந்த நிலையில், இறுதிக் கட்டத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. நமது நாட்டிலுள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் முஸ்லிம்கள் எண்ணிக்கை 30% க்கும் அதிகமாகும். மொத்தமாக எடுத்துப் பார்த்தால், இந்து மக்கள் தொகை 80% ஆகவும், முஸ்லிம்கள் 14% ஆகவும் உள்ளனர்.
சிறுபான்மையினர் ஆதரவு தங்களுக்கு உள்ளதாக காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூறிவருவதால் இந்த புள்ளிவிவரத்தை வைத்து அக்கட்சிகள் எவ்வளவு ஓட்டுக்களை கண்டிப்பாக வாங்கியே தீரும் என்பதை பாஜக தலைமை கணக்குப் போட்டு வருகிறதாம்.
ஓகே, எந்த மாநிலத்தில் எவ்வளவு முஸ்லிம் மக்கள் தொகை உள்ளது தெரிந்து கொள்வோமா. அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தில் சதவிகித அடிப்படையில் அதிக முஸ்லிம்கள் உள்ளனர், அதைத் தொடர்ந்து கேரளா, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்கள் வருகின்றன.

மக்கள்தொகை பிரிவு பின்வருமாறு:
| மாநிலங்கள் | இந்து (%) | முஸ்லிம் (%) |
|---|---|---|
| அசாம் | 62 | 34 |
| மேற்கு வங்கம் | 71 | 27 |
| கேரளா | 55 | 27 |
| உத்தரப்பிரதேசம் | 80 | 19 |
| பீகார் | 82 | 17 |
இதை தவிர்த்து, ஜார்கண்ட், கர்நாடகா, டெல்லி மற்றும் தெலுங்கானா ஆகியவை குறிப்பிடத்தக்க முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட பிற மாநிலங்கள்.
சமீபகால தேர்தல்களில் முஸ்லிம்களின் வாக்குகள் பாஜகவுக்கு அதிகரித்தது. 2009 இல், அவர்கள் 4% முஸ்லிம் வாக்குகளைப் பெற்றனர், இது 2014 இல் 8% ஆக உயர்ந்தது. 2019 இல் அப்படியே இருந்தது. காங்கிரஸ் தொடர்ச்சியாக 38% முஸ்லிம் வாக்குகளைப் பெற்றது, மற்ற கட்சிகள் பிற சதவீதத்தை பிரித்தன.
2014ல், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள 48 இடங்களில், 17 இடங்களில் பாஜக வென்றது, 2019ல், 13 இடங்களை வென்றது. காங்கிரஸ் 2014ல் 10 இடங்களையும், 2019ல் 11 இடங்களையும் வென்றது. திரிணாமுல் காங்கிரஸ் 2014ல் 5 இடங்களையும், 2019ல் 7 இடங்களையும் வென்றது.
அதேநேரம், முஸ்லிம் வேட்பாளர்களின் வெற்றி விகிதம் குறைவாக உள்ளது, 2014 மற்றும் 2019 இரண்டிலும் 3% மட்டுமே வெற்றி பெற்னர். 2019 இல், 27 முஸ்லிம் எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முஸ்லிம் வாக்குகள் சிதறிய நிலையில், பாஜகவுக்கு ஆதரவான, இந்து வாக்குகள் குவியத் தொடங்கின. தேசியவாதம், இந்துத்துவம், ராமர் கோவில் போன்ற பிரச்சனைகளில் இந்து வாக்காளர்கள் பாஜகவை ஆதரித்தே வந்துள்ளனர். 2019 தேர்தலில், சுமார் 44% இந்து வாக்காளர்கள் பாஜகவை ஆதரித்தனர்.
அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தில் 2024 தேர்தல்களில் இந்து-முஸ்லிம் வாக்குகள் பாஜக-மற்றும் அதை எதிர்க்கும் கட்சிகள் என பிரிய அதிக வாய்ப்புள்ளதாம் . குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) விவகாரங்கள் சிறுபான்மையினரிடையே பதட்டத்தை அதிகரித்துள்ளன.












Click it and Unblock the Notifications