‛‛தொழில் மீன் விற்பது’’.. மயிலாடுதுறை நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாளின் சொத்து எவ்வளவு தெரியுமா?
மயிலாடுதுறை: மயிலாடுதுறை லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளராக அந்த கட்சியின் நிர்வாகி காளியம்மாள் போட்டியிடும் நிலையில் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் தான் அவரது சொத்து மதிப்பு குறித்த முக்கிய விபரம் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. மயிலாடுதுறை தொகுதி என்பது திமுகவில் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

அதிமுக கூட்டணியில் இந்த தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் பி காளியம்மாள் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் தான் காளியம்மாள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று மயிலாடுதுறை நாம் தமிழர் வேட்பாளருக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார். மாவட்ட தேர்தல் அதிகாரி மகாபாரதியிடம் வேட்பு மனு தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்து கொண்டார். இந்நிலையில் தான் நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள் வேட்புமனுவுடன் தனது சொத்து விபரங்கள் குறித்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.
அதில் காளியம்மாள் இளங்கலை வணிகவியல் படிப்பை 2004-2007 ல் முடித்ததாக தெரிவித்துள்ளார். தற்போது மீன் விற்பனை செய்து வருவதாகவும் மாத வருமானமாக ரூ.30 ஆயிரம் கிடைக்கப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு கடந்த 2023-2024 ஆண்டு வருமானம் என்பது ரூ.4 லட்சத்து 38 ஆயிரத்து 600 என அவர் காட்டியுள்ளார். இவர் மீது 2 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகள் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசியபோது பதிவு செய்யப்பட்டுள்ளது.
காளியம்மாளின் சொத்து விபரங்களை பொறுத்தமட்டில் அவரது கையில் ரூ.50 ஆயிரம் உள்ளது. கணவர் பிரகாஷ் கையில் ரூ.25,000 உள்ளது. காளியம்மாளின் வங்கி கணக்குகளில் சுமார் ரூ.32 ஆயிரம் சேமிப்பு தொகை உள்ளது. அதோடு ரூ.13.75 லட்சம் மதிப்பிலான 200 கிராம் தங்க நகைகளை காளியம்மாள் வைத்துள்ளார். மொத்தமாக காளியம்மாளிடம் ரூ.14 லட்சத்து 63 ஆயிரத்து 763 மதிப்பிலான சொத்து உள்ளது. அசையா சொத்துகள் எதுவும் இல்லை. காளியம்மாள் பெயரில் கடனாக ரூ.5.60 லட்சம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர கணவர் பிரகாஷிடம் ரூ.95,300 மதிப்பிலான அசையும் சொத்து உள்ளது. மகனிடம் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 24 கிராம் தங்கம், மகளிடம் ரூ.1 லட்சம் மதிப்பிலான 16 கிராம் தங்க நகைககள் உள்ளதாக காளியம்மாள் தனது வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications