மத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை.. வானிலை மையம் கூறிய மகிழ்ச்சி செய்தி!
மத்திய வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: மத்திய வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வெயில் வாட்டிய நிலையில் நேற்று பிற்பகல் முதல் சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் மழை பலத்த காற்று மற்றும் இடியுடன் மழை வெளுத்தது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்தது.
விடிய விடிய வெளுத்து வாங்கிய மழையில் சென்னை முழுவதும் வெப்பம் தணிந்து குளு குளு சூழல் நிலவி வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மகிழ்ச்சி செய்தி
இந்நிலையில் சென்னை வானிலை மையம் மகிழ்ச்சி செய்தி ஒன்றை கூறியுள்ளது. வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

காற்றழுத்த தாழ்வு நிலை
அப்போது பேசிய அவர் மத்திய வங்கக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகும்

கனமழை வாய்ப்பு
இதன் காரணமாக வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
சென்னையில் இடைவெளி விட்டு அவ்வப்போது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் அடுத்த 3 நாட்களுக்கு மத்திய வங்கக்கடல் பகுதி மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

பலத்த காற்று வீசும்
தமிழக கடலோர பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் 11 செ.மீ மழை
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சையில் 11 செ.மீ., மழை பெய்துள்ளது இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார். வானிலை மையத்தின் இந்த அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications