பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்த வேண்டும்: மதுரை ஹைகோர்ட் பெஞ்ச் கருத்து
மதுரை: பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட்டின் மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
ஆர்.தியாகராஜன் என்பவர் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு தாக்கல் செய்த ஹேபியஸ் ஹார்பஸ் மனு மீதான விசாரணையை நடத்திய ஹைகோர்ட் கிளையின் மணிக்குமார், ரவி ஆகிய நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், "18 வயதிலேயே பெண்கள், காதலர்களுடன் ஓடிப்போய்விடுவதால் அது தொடர்பாக அதிகப்படியான ஹேபியஸ் ஹார்பஸ் வழக்குகளை நீதிமன்றம் எதிர்கொள்கிறது. ஆணின் திருமண வயது 21 ஆக உள்ளபோது, பெண்ணுக்கு மட்டும் ஏன் திருமண வயதை 18ஆக நிர்ணயிக்க வேண்டும்.
18 வயது என்பது பள்ளி படிப்பு முடியும் காலமாகும். அதுவரை ஆண்களும், பெண்களும் ஒன்றாகத்தான் பள்ளியில் படிக்கிறார்கள். ஆனால் அதில் பெண் மட்டும் திருமணம் செய்யலாம், ஆண் திருமணம் செய்ய முடியாது என்பது முரணாக உள்ளது. எனவே பெண்களின் திருமண வயதையும் 21ஆக அதிகரிக்க வேண்டும். இதற்காக, 'இந்திய பெரும்பான்மையினர் சட்டம் 1875' மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டுவரலாம்.
21 வயதில்தான் ஆண்களுக்கு பக்குவம் வரும் என்றால், பெண்களுக்கு மட்டும் எப்படி 18 வயதிலேயே திருமண பக்குவம் கிடைக்கும் என்பது ஆச்சரியமாக உள்ளது. குழந்தைகள் மீது பெற்றோர் மிகுந்த அன்பு வைத்து வளர்க்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுத்து, படிக்க வைக்கிறார்கள்.
ஆனால், பெண் குழந்தைகள் பக்குவப்படாமல் இன்னொருவரை நம்பி தங்கள் வாழ்க்கையை ஒப்படைக்கிறார்கள். இதுகுறித்து கேட்டால், 18 வயதாகிவிட்டதால் சுய முடிவு எடுத்ததாக பெண் பிள்ளைகள் கூறிவிடுகிறார்கள். தங்கள் குழந்தை பக்குவம் இல்லாத வயதில் இன்னொருவருடன் சென்று சுய விருப்பத்தின்படி திருமணம் செய்வதை எந்த பெற்றோராலும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இந்த அடிப்படையில், பெண்களின் திருமண வயதை உயர்த்த பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications