தித்திக்கத் தித்திக்க.. திகட்டத் திகட்ட.. ருசித்துச் சாப்பிட வரும் மாம்பழங்கள்.. ரெடியாகுங்க!
சென்னை: கோடையின் தாக்கம் சற்று முன்னதாகவே தொடங்கி விட்டாலும், இந்தாண்டு மாம்பழ பிரியர்களுக்கு நிச்சயம் தித்திப்பாகத் தான் அமையும் என்கின்றனர் விவசாயிகள். குறிப்பாக சென்னைவாசிகளுக்கு இந்த முறை திகட்டத் திகட்ட மாம்பழம் சாப்பிடும் பாக்கியம் கூடி வருகிறதாம்.
வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே பல இடங்களில் வெயில் மக்களை வறுத்தெடுக்கத் தொடங்கி விட்டது. ஆனால், தமிழகத்தின் சில பகுதிகளில் கடந்த வாரம் திடீர் மழை பெய்து குளிர்வித்தது.
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழையின் குளிர்ச்சி சில நாட்களுக்கு அப்பகுதியில் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் துணை இயக்குநர் பகுலயன் தம்பி தெரிவித்துள்ளார்.

பருவத்தே பெய்த மழை...
மழை பெற்ற பகுதிகளான கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் சேலம் பகுதிகள் மாம்பழ விளைச்சல் பூமியாகும். எனவே இந்தாண்டு மாம்பழ விளைச்சல் அமோகமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. பருவத்தே பெய்த மழை என இதை அப்பகுதி விவசாயிகள் கொண்டாடுகின்றனர்.

முன்னாடி பெய்திருந்தால் மோசம்...
தற்போது பெய்த மழை சற்று முன்னதாகப் பெய்திருந்தால், மாமரத்தில் இருந்த பூக்கள் எல்லாம் கொட்டிப் போய் இருக்கும். அதேபோல், இன்னும் காலம் தாழ்த்தி பெய்திருந்தாலும் மழையால் மாமரத்திற்குப் பலனிருந்திருக்காது. சரியான நேரத்தில் மழை பெய்துள்ளது என சுற்றுச்சூழல் ஆர்வலர் அருண் தெரிவித்துள்ளார்.

விற்பனை அதிகரிக்கும்...
கடந்தாண்டு நாளொன்றுக்கு சுமார் 300 டன் மாம்பழங்கள் விற்பனை ஆனது. இந்தாண்டு விற்பனை இன்னும் அதிகரிக்கும் என கோயம்பேடு மார்க்கெட் பழ வியாபாரிகள் கூறுகின்றனர். மழை பொய்த்தால் காய்கள் சிறுவட்டிலேயே விழுந்து நஷ்டம்தான் வந்திருக்கும். ஆனால் இந்த முறை அப்படி நடக்காமல் தப்பித்துள்ளன மாமரங்கள்.

எதிர்பார்ப்பு...
கடந்த ஆண்டு சென்னையில் தினசரி 300 டன் மாம்பழங்கள் விற்பனையாகியிருந்தன. இந்த ஆண்டு அது அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கோயம்பேடு பழ வியாபாரி ஜெயராமன் கூறுகிறார்.

மாம்பழ லாரிகள்...
ஏப்ரல் 10ம் தேதி முதல் மாம்பழ லாரிகள் வரத் தொடங்க விடுமாம். இவை ஆந்திர மாநிலத்திலிருந்து குறிப்பாக வாரங்கல், விஜயவாடாவிலிருந்து வரும் லாரிகள் ஆகும். தமிழகத்தில் கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டையிலிருந்து சென்னைக்கு மாம்பழங்கள் வருவது வழக்கம்.

மே மாதம் தான்...
மே மாத வாக்கில் தர்மபுரியிலிருந்து மாம்பழம் வரும். ஜூன் மாதத்தில் திண்டுக்கல், தேனி, பெரியகுளம் மாம்பழங்கள் சென்னைக்கு வருமாம்.












Click it and Unblock the Notifications