5 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பியது மேட்டூர் அணை... மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்
மேட்டூர் அணை 5 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் காவிரி டெல்டா மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Recommended Video

சேலம்: மேட்டூர் அணை 5 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் காவிரி டெல்டா மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டிய கனமழையால் அங்குள்ள நீர் நிலைகள் மற்றும் அணைகள் வேகமாக நிரம்பியுள்ளன.
இதன்காரணமாக கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்தால் அணையின் நீர்மட்டம் மளமளவென அதிகரித்தது.

81038 கன அடி வரத்து
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 81038 கன அடியாக அதிகரித்துள்ளது. கேஆர்எஸ் அணையில் இருந்து 51,038 கனஅடியும், கபினி அணையில் இருந்து 30,000 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

39வது முறையாக
இந்நிலையில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. மேட்டூர் அணை தனது வரலாற்றில் முழுகொள்ளளவை எட்டி நிரம்புவது இது 39வது முறையாகும்.

நீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூர் நிரம்பியதையடுத்து 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறக்கப்படுகிறது. காலையில் பாசனத்திற்காக 30,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், 12 மணிக்கு பிறகு 30,000 கனஅடியில் இருந்து 40,000 கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிரம்பியதால் சிறப்பு பூஜை
5 ஆண்டுகளுக்கு பின் அணை நிரம்பியதால் சிறப்பு 16 கண் மதகு பகுதியில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதில் எம்எல்ஏ செம்மலை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மக்கள் மகிழ்ச்சி
மேட்டூர் அணை 5 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளதால் காவிரி டெல்டா மக்கள் மட்டுமின்றி தமிழக மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும், அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்
தஞ்சை, திருச்சி, சேலம், கரூர், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 12 மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications