ஸ்டாலின் மட்டுமல்ல.. யாராலும் எங்க ஆட்சியை கலைக்க முடியாது.. ஜெயக்குமார் திட்டவட்டம்
தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது என்ற நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியை ஸ்டாலின் மட்டுமல்ல; யாராலும் கலைக்க முடியாது என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது: ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இந்த மாபெரும் இயக்கத்தை எஃகு கோட்டையாக மாற்றிக் காட்டியவர் ஜெயலலிதா.
இந்த மாபெரும் கோட்டை உடைந்துவிடக் கூடாது. இரட்டை சின்னம் முடங்கிவிடக் கூடாது. அதிமுக ஆட்சி தொடர்ந்து நடைபெற வேண்டும். இதன் அடிப்படையில் தான் தமிழக அரசு செயல்படுகிறது.

திறந்தே கிடக்கும் கதவுகள்
இந்தக் கட்சி பிளவுபட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் பிரிந்து சென்ற அன்புக்குரிய சகோதரர்கள் திரும்பி வர வேண்டும் என்று விரும்புகிறோம். அவர்களுக்காகவே எங்கள் கதவுகள் திறந்தே இருக்கிறது.

நம்பிக்கை
நிச்சயமாக பிரிந்து சென்ற சகோதரர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இயக்கத்தின் நலன் கருதி, ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் என்ற உணர்வோடு அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்று நம்புகிறேன்.

தீர்வு
பேச்சுவார்த்தையின் மூலம் அவர்கள் என்ன விரும்புகின்றனரோ அதனை பெற்றுக் கொள்ளலாம். பேச்சுவார்த்தையின் மூலமே தீர்வை எட்ட முடியும்.

ஆட்சி கலைப்பு
தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது. ஸ்டாலினாக இருந்தாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி ஆட்சியை கலைக்க முடியாது என்று ஜெயக்குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications