கள்ளச்சாராய வழக்கில் கைதானவருடன் நெருக்கம்? உண்மையில் என்ன நடந்தது? அமைச்சர் செஞ்சி மஸ்தான் விளக்கம்
சென்னை : கள்ளச்சாராய வழக்கில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபருடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேக் ஊட்டி நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் அது குறித்த கேள்விக்கு செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் செஞ்சி மஸ்தான்.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் திமுக கவுன்சிலரின் கணவருமான மருவூர் ராஜா குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளச்சாராய வியாபாரி மருவூர் ராஜாவுடன் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

மேலும், கள்ளச்சாராய வியாபாரியுடன் அமைச்சருக்கு என்ன தொடர்பு என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருந்தனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் மரக்காணம் துயரச் சம்பவத்தில், மரூர் ராஜா எனும் சாராய வியாபாரியின் பெயர் வெளியிடப்பட்டிருக்கிறது. திமுகவைச் சேர்ந்த இவர், திண்டிவனம் 20வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ரம்யா ராஜா என்பவரின் கணவர். சாராய விற்பனையில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் அவர் மீது பல்வேறு வழக்குகள் இருக்கின்றன.
2018ம் ஆண்டிலேயே சாராய விற்பனை தொடர்பாக இவர்மேல் வழக்கு இருந்து வருகிறது. அதுபோக, பல்வேறு குற்ற வழக்குகளும் இவர் மேல் இருக்கின்றன. இந்த மரூர் ராஜா அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு மிக நெருக்கமானவர். தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டாலும், அமைச்சரின் செல்வாக்கால், பெரிய அளவில் நடவடிக்கை இல்லாமல் தனது சாராய விற்பனையைத் தொடர்ந்து வந்திருக்கிறார்.
கடந்த ஏப்ரல் மாதம், காரில் சாராயம் கடத்திய வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். எனினும், அமைச்சரின் நெருக்கத்தால், சிறையில் இருந்தபடியே தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வருகிறார் என்றும் தெரிய வருகிறது. ஒரு சாராய வியாபாரியை, அமைச்சர் செஞ்சி மஸ்தான் பாதுகாத்து கொண்டிருக்கிறாரா? தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து செஞ்சி மஸ்தானை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், "குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் ஏற்கனவே தெரிவித்துள்ளார், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எந்த பாரபட்சமும் இதில் இருக்காது என்று தெரிவித்துள்ளார்
யார் வேண்டுமானாலும் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். எதார்த்தமாக வருவார்கள், என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். நான் பொதுவாழ்வில் இருக்கிறேன். அண்ணே இன்று எனக்கு பிறந்தநாள் என்று ஒருவர் வருவார், அண்ணே ஒருவர் திருமண நாள் எனக்கு என்று வருவார், அவர்களை நாங்கள் வாழ்த்துவோம். புகைப்படம் எடுத்துக் கொள்வோம். அது போன்ற புகைப்படம் தானே தவிர, வேறொன்றும் இல்லை" என்று விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications