நாங்க புருஷன் பொண்டாட்டி மாதிரி.. கை கால் பட்டுக்கலாம்.. ஓ.எஸ் மணியன் "குபீர்" பேச்சு!
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பிறகு எல்லாக் குற்றச்சாட்டுகளையும் மறந்து மனம் ஒத்த கணவன் மனைவி போல் ஆகிவிட்டோம் எனக் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பிறகு எல்லாவற்றையும் மறந்து கணவன் மனைவி போல் நாங்கள் ஆகிவிட்டோம் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.
சசிகலாவை அதிமுகவின் பொது செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு, அமைச்சர் ஓ.எஸ். மணியன் எதிர்ப்புத் தெரிவித்தார் என சசிகலாவின் தம்பி திவாகரன் தெரிவித்திருந்தார். இதுகுறித்து ஓ.எஸ் மணியனிடம் கேட்டபோது, சசிகலா குறித்து நேற்று இணைப்புக் கூட்டத்தில் எதுவும் பேசப்படவில்லை. ஆகையால் அதுகுறித்து நான் பேச வேண்டிய அவசியம் வரவில்லை. ஆனால், இதுகுறித்து திவாகரனுக்கு தவறான தகவல் போய்ச் சேர்ந்திருக்க வேண்டும். ஆகையால் திவாகரன் அவ்வாறு கூறியிருக்கலாம் என்று கூறினார்.

மேலும், ஓபிஎஸ் அணி எடப்பாடி பழனிச்சாமி அரசில் ஊழல் நடக்கிறது என்று குற்றம்சாட்டினார்கள். ஆனால் இன்று குற்றம்சாட்டிய அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது சாத்தியமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் 'ஆகாத பொண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்ற அடிப்படையில் முன்பு இருதரப்பும் ஒருவர் மேல் ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டோம்.
ஆனால், இப்போது நாங்கள் மனம் ஒத்த கணவன் மனைவி ஆகிவிட்டோம். ஆகையால் இனி கை பட்டாலும் கால் பட்டாலும் குற்றமில்லை. பிரிந்தவர்கள் ஒன்று சேரவே கூடாதா? எனப் பதில் அளித்தார். சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்ததாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேரடியாக ஒத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
