ஸ்டாலினுக்கு பதவி பித்து பிடித்துள்ளது: விளாசும் அமைச்சர் செல்லூர் ராஜு
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு பதவி பித்து பிடித்துள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.
மதுரை: எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு பதவி பித்து பிடித்துள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.
மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட பரவையில், தொகுதி அமைச்சரான செல்லுார் ராஜு துாய்மைப்பணிகளை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து செய்தியளார்களிடம் பேசிய அவர், மழை நீர் தேங்கி கொசு உற்பத்தியாவதால் பல்வேறு நோய்கள் உருவாவதாக கூறினார்.

டெங்கு காய்ச்சலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்கனவே திட்டமிடப்பட்ட பணிகள் இருந்ததால், சிவாஜி மணிமண்டபத்தை அவரால் திறக்க முடியவில்லை என்றார்.
சிவாஜி சிலை கல்வெட்டு அகற்றம் குறித்து, தி.மு.க.,வினர் பெரிதாக பேசி வருகிறார்கள் என்ற அவர் கடந்த 1979ம் ஆண்டு ஏப்.,15ல் 133 அடி திருவள்ளுவர் சிலைக்கு எம்.ஜி.ஆர் அடிக்கல் நாட்டிய கல்வெட்டை கழிப்பறையில் தி.மு.க.,வினர் வீசினர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த ஆட்சியை ஏன் கலைக்கவில்லை என மக்கள் தன் மீது கோபப்படுவதாக கூறும் ஸ்டாலினுக்கு பதவி பித்து பிடித்துள்ளது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு சாடினார். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு, ஆட்சி நிர்வாகம் சரியாக நடந்ததா? என்று கேள்வி எழுப்பிய அவர் நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் இருந்தது என்று குற்றம்சாட்டினார்.
பத்திரிகை அலுவலகத்தில் 3 பேர் கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்த அவர் இன்று மக்கள் அமைதியாக வாழ்வதாக தெரிவித்தார்.மக்கள் ஒத்துழைப்புடன் ஆட்சி நடைபெறுகிறது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.












Click it and Unblock the Notifications