தேமுதிகவுக்கு ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்காது.. வளர்மதி சாபம்!
மதுரை: சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்காது என்று தமிழக அமைச்சர் பா. வளர்மதி சாபம் விட்டுள்ளார்.
மதுரையில் நடந்த அதிமுக அரசின் 3 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வளர்மதி சிறப்புரையாற்றினார்.

அப்போது வளர்மதி பேசுகையில்,
தமிழகத்தில் எத்தனையோ அரசியல் தலைவர்கள் இருந்துள்ளனர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிறகு புரட்சித்தலைவி அம்மா தான் தமிழக மக்களின் ஒரே தலைவராக திகழ்ந்து வருகிறார்.
இங்கே மின் கட்டண பிரச்சினைக்காக ஒரு கட்சி தலைவர் ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார். அவருக்கு ஒரு கட்சிக்கு தலைமை தாங்கும் தகுதி கூட கிடையாது. நிதானம் இல்லாத அரசியல் வாதியாக விஜயகாந்த் இருக்கிறார். அவருக்கு கட்சியை நடத்துவதற்கு எந்த தகுதியும் இல்லை. தமிழகத்தில் அரசியல் பண்ண முடியாத விஜயகாந்த் டெல்லிக்கு சென்று தேர்தலில் போட்டியிட்டார். அங்கே மக்கள் அவரை ஆதரித்தார்களா? என்றால் இல்லை. அங்கே மண்ணை கவ்வினார்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்களின் முதல்வர் அம்மாவின் நல்லாட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் குறைகள் இருந்தால் சட்டமன்றத்தில் பேச வேண்டியதுதானே. ஆனால் சட்டமன்றத்துக்கு வராமல் புறவாசல் வழியாக ஓடும் விஜயகாந்த் மதுரையில் மக்களிடம் புலம்பி இருக்கிறார்.
மின் கட்டண உயர்வு குறித்து சட்டசபையில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் ஒன்றரை மணி நேரம் பேசினார். அவரது பேச்சுக்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் ஒருவர் கூட பதில் பேச முடியவில்லை. அந்த அளவுக்கு புள்ளி விபரங்களோடு பேசினார். ஆனால் விஜயகாந்த் மக்களை ஏமாற்றும் விதத்தில் ஆர்ப்பாட்டம் செய்கிறார். தமிழக மக்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது.
மதுரை மண் வீரம் விளைஞ்ச மண். நானும் மதுரையை சேர்ந்தவர் தான். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் கோட்டை மதுரை, புரட்சித்தலைவி அம்மாவின் அரணாக திகழ்ந்து வருகிறது. மக்களிடம் ஏமாற்று நாடகம் போட்டு முதல்வராகி விடலாம் என்று விஜயகாந்த் கனவு காண்கிறார். அவரது கனவு பலிக்காது.
அடுத்த சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்காது. தமிழக மக்களின் முதல்வர் அம்மா சூழ்ச்சிகளின் சதி வலைகளை தகர்த்தெறிந்து விரைவில் மீண்டு வருவார். தமிழகத்தின் நிரந்தர முதல்வசராக இருந்து தமிழக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவார்.
தற்போது நடப்பது அம்மாவின் ஆட்சி தான். இதனை எந்த கொம்பனாலும் அசைத்து பார்க்க முடியாது. அம்மா இல்லை என்று சில உதிரி கட்சிகள் நினைக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சி கூட 2016 தேர்தலில் ஆட்சியை பிடிப்போம் என்கிறார்கள். காங்கிரஸ் தற்போது குஷ்புவிடம் சென்றுவிட்டது. இதனை தமிழகமே வேடிக்கையாக பார்க்கிறது.
தி.மு.க. மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு கட்சி. எனவே தமிழகத்தை தலைநிமிர செய்ய தகுதியுடைய ஒரே தலைவர் அம்மா ஒருவர் மட்டும் தான். இதனை மக்கள் நம்புகிறார்கள். எனவே இனி எந்த தேர்தலிலும் அம்மாவுக்கு தமிழக மக்கள் ஒட்டு மொத்த ஆதரவையும் வழங்குவார்கள். தமிழகத்தின் நிரந்தர முதல்வராக அம்மா திகழ்வார் என்றார் வளர்மதி.












Click it and Unblock the Notifications