குஜராத், ஹிமாச்சல பிரதேச வெற்றிக்காக பாஜகவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ள பாஜகவுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: குஜராத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டும் ஹிமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை பிடித்துக் கொண்ட பாஜகவுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிவடைகிறது. இதையடுத்து ஹிமாச்சல பிரதேசத்தில் 68 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நவம்பர் 9-ந் தேதி நடைபெற்றது. மொத்தம் 74.61% வாக்குகள் பதிவாகி இருந்தன.
அதேபோல் குஜராத்தில் கடந்த 9, 14 -ந்தேதிகளில் இரண்டு கட்டங்களாக 182 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இரு கட்ட தேர்தல்களிலும் மொத்தம் 68.41% வாக்குகள் பதிவாகின.

தபால் வாக்குகள்
இந்த இரு மாநிலங்களுக்கும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் முதலில் தபால் வாக்குகள் பிரித்து எண்ணப்பட்டன. அதைத் தொடர்ந்து மீதமுள்ள வாக்குகள் எண்ணிக்கையின்படி ஹிமாச்சல பிரதேசத்தில் பாஜக 42 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 22 இடங்களிலும், மற்றவை 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

ஸ்டாலின் வாழ்த்து
அதேபோல் குஜராத் மாநிலத்தில் பாஜக 104 இடங்களிலும் காங்கிரஸ் 75 இடங்களிலும் மற்ற கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இரு தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளதற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒன்றுபட வேண்டியது அவசியம்
இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் கூறுகையில் குஜராத், இமாச்சல் பிரதேச வெற்றிக்காக பாஜகவுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றுபட வேண்டியது அவசியமாகியுள்ளது.

தகுதி நீக்கம் செய்ய வேண்டும்
தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படவேண்டும். சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் என்பது போல தேர்தல் ஆணையம் இருக்க வேண்டும். ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடா தாராளமாக நடக்கிறது. அதிமுக, தினகரன் இருவருமே பணம் தருகிறார்கள். மதுசூதனை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications