திமுக... அடுத்த தலைவர் ஸ்டாலின் தான்... அடித்துச் சொல்கிறார் கனிமொழி!
சென்னை: எதிர்காலத்தில் ஸ்டாலின் தான் திமுக தலைவர் என கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளதாக திமுக எம்.பி.யும், மகளிர் அணி செயலாளருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க.வின் அடுத்த தலைவர் யார்? என்ற பேச்சே எழவில்லை. எதிர்காலத்தில் ஸ்டாலின்தான் தி.மு.க. தலைவர் என கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர் மிகுந்த தகுதியும், திறமையும் வாய்ந்தவர். அவர் கட்சியை திறம்பட முன்னணியில் வழிநடத்தி செல்கிறார்.

அவர் எந்த கோரிக்கையையும் வலியுறுத்தவில்லை. தொடர்ந்து மகிழ்ச்சியுடன் கட்சி பணியாற்றி வருகிறார். எனவே உரிய நேரத்தில் அவர் தலைமை பொறுப்பு ஏற்பதற்கான அறிவிப்பு வெளியாகும். அதில் எந்தவித பிரச்சனையும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
தற்போது நான் பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்களுக்கு தலைவராக இருக்கிறேன். நான் பாராளுமன்றத்தில் பிரதிநிதியாக இருந்து தமிழ்நாட்டுக்காக மத்திய அரசிடம் இருந்து உரிமைகளை பெற்றுக்கொடுப்பதே எனது பணி.
எதிர்காலத்தில் அரசியல் மட்டும் என நான் நினைக்கவில்லை. எனது கட்சிக்கு சிறந்த பங்களிப்பை செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்று ஜெயிலுக்கு சென்றுள்ளார். தற்போது அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே அதுகுறித்து என்னால் கருத்து சொல்ல முடியாது.
என் மீதான வழக்கை பொறுத்தவரை கலைஞர் டி.வி.யில் நான் ஒரு இயக்குனராக இல்லை. அந்த டி.வி. தொடர்பான எந்தவித ஆலோசனைகளிலும் முடிவுகளிலும் நான் ஈடுபடவில்லை' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications