மக்கள் நலக் கூட்டணி: இவ்வளவு நெருக்கமா இருக்காங்களே.. இந்தத் கூட்டணியா உடையும்?
சென்னை: மக்கள் நலக் கூட்டணி உடையும் என்று பல தலைவர்களும் கூறி வந்தாலும் அதற்கான வாய்ப்புகளை அடியோடு மறுக்கும் வகையில் அதன் தலைவர்கள் ஒன்றாக பங்கேற்ற புதிய தலைமுறை தொலைக்காட்சியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெளிப்படுத்தியது.
வைகோவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கட்சி வெளியேற சாத்தியம் உள்ளதாக கூறப்படுகிறது. இதையே பல அரசியல் கட்சித் தலைவர்களும் கூறி வருகின்றனர்.

தொடர் பிரசாரம்
ஆனால் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களான வைகோ, திருமாவளவன், ஜி. ராமகிருஷ்ணன் மற்றும் முத்தரசன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பிரசாரத்தின் இடையே 4 தலைவர்களும் ஒன்றாக பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றை புதிய தலைமுறை தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்தது. ஒரு ஹோட்டலில் சிற்றுண்டி அருந்தியபடி மிக அன்னோன்யமாக இந்தத் தலைவர்கள் கலந்துரையாடினர். வழக்கமான அரசியல் தலைவர்களுக்கு உரிய பந்தா ஏதும் இல்லாமல் நால்வரும் பேசினர். மேலும் ஒருவருக்கு ஒருவர் ஆழமான புரிதலோடு இவர்கள் இருப்பதையும் இந்த கலந்துரையாடல் காட்டியது.

இயல்பான கலந்துரையாடல்
வழக்கமான கேள்வி பதில் போன்ற நிகழ்ச்சியாக இல்லாமல் இயல்பான கலந்துரையாடலாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது. கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கும் 4 பேருமே இயல்பாக ஈகோ இல்லாமல் பதில்களை தந்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமாரும் இதில் இணைந்திருந்தார்.

இணக்கமான தலைவர்கள்
இவர்களது கலந்துரையாடலில் வெளிப்பட்ட பிரதான அம்சமே ஒருவருக்கு ஒருவர் நல்ல புரிதலில் இணக்கமாக இருப்பதை வெளிப்படுத்தியிருந்தது. இந்த இணக்கமான சூழலைப் பார்க்கும் போது எத்தனை ஆரூடங்கள் கூறப்பட்டாலும் இவர்கள் பிரிந்து போவதற்கான சாத்தியம் இல்லை என்பதுதான் தெள்ளத் தெளிவாக இருந்தது. நால்வருமே தங்களது குடும்பம், மனைவி, குழந்தைகள், பேரக் குழந்தைகள், போராட்டங்கள், பயணங்கள், அலைச்சல், ஓய்வில்லாத பொது வாழ்க்கை.. என ஒளிவு மறைவின்றி எல்லா விஷயங்களையும் திறந்த மனதுடன் பேசினர்.

திருமா திருமணம்
அரசியல் விவாதங்களுக்கு அப்பால் கூடுதல் சுவராசியமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் திருமணம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அதில் ஒரு கட்டத்தில் வைகோ, திருமாவை பார்த்தால் 35 வயதுதான் ஆகிறது... நிச்சயம் திருமணம் நடக்கும் என்றார்.
திருமாவளவனோ, தன் தந்தை மரணிக்கும் முன்பாக கடைசியாக முன்வைத்த வேண்டுகோளே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் என நெகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டினார்.

அனைவருக்கும் அண்ணன் வைகோ
இக் கூட்டணியின் அச்சாணியே வைகோ தான் என்பதும் தலைவர்களின் பேச்சில் வெளிப்பட்டது. அனைவருமே அவரை அண்ணன் என்று அழைத்ததோடு, அவருடனான தங்கள் அரசியல் பயணம் குறித்தும், தங்களது தனிப்பட்ட விஷயங்கள், குடும்ப விஷயங்களையும் வைகோவுடன் பகிர்ந்து கொள்வது குறித்தும் தெரிவித்தனர். இந்தக் கூட்டணி உடையும் என்பது வெறும் கனவாகவே தெரிகிறது.












Click it and Unblock the Notifications