வேளாண் அதிகாரி தற்கொலையில் அதிமுக பிரமுகர்களுக்கு தொடர்பு - விசாரணை தீவிரம்
நெல்லை: திருநெல்வேலி வேளாண்மை அதிகாரி தற்கொலையில் அதிமுக பிரமுகர்கள் இரண்டு பேருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாளையங்கோட்டை திருமால் நகரை சேர்ந்த முத்துகுமாரசாமி, நெல்லை வேளாண்மை துறையில் பொறியியல் உதவி செயற்பொறியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த பிப்ரவரி 20ம் தேதி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். முத்துகுமாரசாமி தற்கொலைக்கு காரணம் தமிழக வேளாண்மை துறை அமைச்சகத்தில் இருந்து வந்த மிரட்டல்தான் காரணம் என பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
நெல்லை மாவட்ட வேளாண்மை துறையில் காலியாக இருந்த 7 டிரைவர் பணியிடங்களை சீனியரிட்டி அடிப்படையில் நிரப்ப அரசு முடிவு செய்தது. ஆனால் சென்னையை சேர்ந்த வேளாண் அதிகாரிகள் தலையிட்டு தங்களுக்கு வேண்டியவர்களுக்கு அந்த வேலையை போட சொல்லி உத்தரவிட்டதாக தெரிகிறது. அதை ஏற்று கொள்ளாத முத்துகுமாரசாமி பதிவு முப்பு அடிப்படையில் அதை நிரப்பினார். இதை அறிந்த அமைச்சர்கள் வட்டாரங்கள் அவரை சென்னைக்கு அழைத்து கண்டித்தனர். மேலும் டிரைவர்களை நேரடியாக நியமித்தால் தங்களுக்கு இழப்பிடாக ரூ.16 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும் அவரை மிரட்டியதாக தெரிகிறது.
இதையடுத்து முத்துகுமாரசாமி தனது பிஎப் பணத்தில் இருந்து ரூ.6 லட்சம் எடுத்து கொடுக்க முன் வந்துள்ளார். ஆனால் அதனை ஏற்க மறுத்த அதிகாரிகள் தரப்பினர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இகனால் மனமுடைந்த அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் பதவி பறிக்கப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது. அவர்கள் முத்துகுமாரசாமியின் செல்போன் எண்ணுக்கு யார் யாரெல்லாம் பேசியுள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தியதில் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர் ஒருவர் போன் செய்து மிரட்டிய தகவல் கிடைத்ததாகத் தெரிகிறது.
மேலும் இந்த விவகாரத்தில் நெல்லையை சேர்ந்த ஆளும் கட்சி முக்கிர பிரமுகர்கள் இருவருக்கு தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications