அங்காரகனும் அதிகார நந்தியும்...
செவ்வாய்கிழமையான இன்று அங்காரகன் தினத்தில் அதிகார நந்தி வாகனத்தில் இன்று கபாலீஸ்வரர் அருள்பாலித்தார்.
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனித் திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று செவ்வாய்கிழமை அதிகார நந்தி வாகனத்தில் கபாலீஸ்வரர் மாட வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தார்.
கிரகங்களில் அதிகாரத்தையும் கம்பீரத்தையும் குறிக்கும் கிரகம் என்றால் அது செவ்வாய்தான். சூரியனும் அதிகாரத்தை குறிக்கும் கிரகம்தான் என்றாலும் சூரியன் அரவணைத்து செல்லும் அதிகாரமும் ஆன்மீகத்தோடு சேர்ந்த கம்பீரமும் கொண்டது என்பதால் இரண்டிற்க்கும் கால தேச வர்தமானம் மாறுபடும். வீரமும் துணிச்சலும் கட்டுக்கடங்காத தன்மையும் கொண்ட கிரகம் செவ்வாயாகும்.
சூரியனும் செவ்வாயும் ஆண்மையை குறிக்கும் கிரகங்கள் என்றாலும் ஒரு பெண்ணுக்கு தந்தையை குறிக்கும்போது அரவனைத்து செல்லும் சூரியனும் கணவனையும் இளைய சகோதரனையும் குறிக்கும்போது செவ்வாயும் காரகமாகின்றன.
பராக்கிரமம் மிக்க, செயல் ஆற்றல் உள்ள கிரகம் செவ்வாய். ஆற்றல், ஆதிக்கம், பராக்கிரமம், வீரதீர செயல்கள், அதிகாரம் செலுத்துதல், ஆளுமைத்திறன், நம்பிக்கை, வளைந்து கொடுக்காத தன்மை, தர்மம், நேர்மை, நியாயம் போன்ற பல தன்மைகள் கொண்ட கிரகம். போலீஸ், ராணுவம், தீயணைப்புத்துறை, உயர் பதவிகள், சகோதர உறவுகள், மண், மனை, வீடு, நிலம், தோட்டம், எஸ்டேட் போன்றவற்றுக்கான அதிபதி செவ்வாய்.

செவ்வாயின் பலம்
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற அரசாங்க உயர் பதவிக்கு அனுகிரகம் செய்வதும் செவ்வாய்தான். தோற்றத்தில் கம்பீரம், நடையில் மிடுக்கு, குரலில் அதிகாரத்தை ஏற்படுத்தி தரக்கூடியவர். போட்டி, பந்தயங்களில், சாகச நிகழ்ச்சிகளில் புகழ்பெற செவ்வாயின் பலம் அவசியம் தேவை.

அதிகார நந்தி
செவ்வாய் அதிகாரத்தையும் பதவியும் குறிப்பதால்தான் அவர் காலபுருஷனுக்கு 10ஆம் மிடமான மகரத்தில் உச்சம் பெறுகிறார். பதவி அதிகார யோகத்திற்க்கும் திருமண யோகத்திற்க்கும் செவ்வாயின் அருள் கடாக்ஷமின்றி ஒன்றும் நடக்காது. சிவனின் காவலனாக விளங்கும் நந்தியம்பெரிமானும் அதிகாரம் பதவி ஆகியவற்றை கொடுப்பதில் செவ்வாயை போன்றே விளங்குகின்றார்.

நந்தி வழிபாடு
அதிகாரம் பதவி மட்டுமின்றி திருமண யோகத்திற்க்கும் நந்தியம்பெருமான் முக்கியத்துவம் பெறுகிறார். இன்னும் சொல்லபோனால் செவ்வாய் தோஷம் நிவர்த்திக்கு நந்திவழிபாடே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிரதோஷ காலத்தில் நந்தி வழிபாடு செய்வது செவ்வாயின் காரகங்களான திருமணயோகம், கடன் நிவருத்தி, ஆற்றல், வெற்றி, உயருபதவி ஆகியவை ஏற்படும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

பங்குனிப் பெருவிழா
"நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்" என்பதும் " அதிகார நந்தி பார்த்தால் அழியாத பதவி நிச்சயம்" என்பதும் ஆன்றோர் வாக்கு.
அத்தகைய சிறப்பு வாய்ந்த நந்திக்கு அரியலூர் மாவட்டம் திருமழப்பாடியில் இன்று செவ்வாய்கிழமை (4/4/2017) திருமணம் நடைபெறுவதும் சென்னை திருமயிலை கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழாவில் அதிகார நந்தியாக வருவதும் சிறப்பு ஆகும்.

நந்தி தரிசனம் செய்யுங்கள்
மேலும் திருமயிலை அதிகார நந்தி 100 வருட சிறப்பு வாய்ந்த நந்தி என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு வேலையில் பிரச்சனையா? உங்கள் தகுதிகேற்ப்ப அதிகாரம் இல்லையா? உயர்பதவி முன்னேற்றம் கிடைக்கவில்லையா? அப்படியென்றால் நீங்கள் திருமயிலை கபாலீஸ்வரர் அதிகார நந்தியை தரிசித்து பிரார்தனை செய்துக்கொள்ளுங்கள். அடுத்த அதிகார நந்தியை பார்க்கும் முன் உங்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடும்.












Click it and Unblock the Notifications