போடியில் ஓபிஎஸ்க்கு கஷ்டம்தான்.. தொகுதியை மீண்டும் கைப்பற்றும் அதிமுக.. நக்கீரன் சர்வே!
தேனி: திமுக சார்பாக போடி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இம்முறை வெல்வது கடினம் என்று நக்கீரன் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போடி தொகுதியில் அதிமுக சார்பாக தொடர்ந்து 3 முறை போட்டியிட்டு வென்ற ஓபிஎஸ், இம்முறை திமுக சார்பாக களமிறங்கி இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நக்கீரன் இதழ் சார்பாக கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் திமுக 3 தொகுதிகளையும், அதிமுக ஒரு தொகுதியையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி தொகுதியில் திமுக 45%, அதிமுக 39%, தவெக 10% வாக்குகள் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல் பெரியகுளம் தொகுதியில் திமுக 44%, அதிமுக 39%, தவெக 11% வாக்குகளை கைப்பற்றும் என்றும், கம்பம் தொகுதியில் திமுக 47%, அதிமுக 36%, தவெக 11% வாக்குகளை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போடி தொகுதியை பொறுத்தவரை அதிமுக 43%, திமுக 40%, தவெக 11% வாக்குகளை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
போடி தொகுதியில் திமுக சார்பாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த 3 தேர்தலில் அதிமுக சார்பாக போடி தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ், மகத்தான வெற்றியை பெற்றார். அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருந்ததால், அந்த தொகுதியில் ஓபிஎஸ்-க்கு மிகப்பெரிய வரவேற்பும் இருந்தது. ஆனால் 2 மாதங்களுக்கு முன் ஓபிஎஸ் திமுகவில் இணைந்தார்.
திமுகவில் இணைந்த கைகளோடு முக்குலத்தோர் சமூக மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் பரமக்குடி, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் திமுக சார்பாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனைகளை நடத்தினார். சட்டசபைத் தேர்தல் அறிவிப்புக்கு பின் ஓபிஎஸ் போடி தொகுதியில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
அவருடன் மகன் ரவீந்திரநாத் இணைந்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். இருந்தாலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றுவிட்டு, இம்முறை உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கி இருப்பது அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாகி இருக்கிறது. அதேபோல் கடந்த தேர்தலிலும் தேனி மாவட்டத்தின் இதே 3 தொகுதிகளையும் திமுக கைப்பற்றியது.












Click it and Unblock the Notifications