நரம்பு பாதிப்பிலிருந்து நலம் பெற்ற நாஞ்சில் சம்பத்! பழைய உற்சாகத்துடன் மீண்டும் ஊர் ஊராக சொற்பொழிவு!
நரம்பு பாதிப்பிலிருந்து நலம் பெற்ற நாஞ்சில் சம்பத்.
தென்காசி: நரம்பியல் ரீதியான பிரச்சனைகளால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாஞ்சில் சம்பத், தற்போது பூரண நலம் பெற்று பழைய உற்சாகத்துடன் சொற்பொழிவு நிகழ்த்த தொடங்கியுள்ளார்.
தென்காசி மாவட்டம் இலஞ்சியில் நடைபெற்ற ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய இவர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை உள்ளிட்டோரை வெளுத்து வாங்கினார்.
இதனிடையே நாஞ்சில் சம்பத் பேசுகிறார் என்ற விளம்பரத்தால், கட்சிக்காரர்களை கடந்து பொதுமக்களும் அந்த நிகழ்ச்சியில் அவரது பேச்சைக் கேட்க பெருமளவில் திரண்டிருந்தனர்.

நாஞ்சில் சம்பத்
தமிழ்நாட்டில் உள்ள தலைசிறந்த திராவிட இயக்க பேச்சாளர்களில் ஒருவர் நாஞ்சில் சம்பத். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் திமுகவுக்காக பரப்புரை செய்த இவர், இப்போதும் திமுக அரசு மீதான விமர்சனங்களுக்கு யூடியூப் சேனல்கள் மூலம் பதிலடி கொடுத்து வருகிறார். அதேபோல் இலக்கிய மேடைகள், கட்சிப் பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று பேசி வருகிறார்.

நரம்பியல் பிரச்சனை
இந்நிலையில் இவருக்கு நரம்பியல் ரீதியான பிரச்சனை இருந்ததால் அவ்வப்போது அது தொடர்பான பாதிப்புக்கு ஆளாகி அவதிப்பட்டார். அண்மையில் கூட ஜனவரி மாதம் ஏற்பட்ட பாதிப்பால் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு செய்து கொடுத்தார்.

வீட்டில் ஓய்வு
சிகிச்சைக்கு பிறகு கடந்த ஒன்றரை மாதங்களாக வீட்டில் ஓய்வெடுத்து வந்த நாஞ்சில் சம்பத் மீண்டும் மேடைகள் ஏறி முழங்க ஆரம்பவித்துவிட்டார். அந்த வகையில் தென்காசி மாவட்டம் இலஞ்சியில் நடைபெற்ற ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய இவர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை உள்ளிட்டோரை வெளுத்து வாங்கினார். பழையபடி உற்சாகத்துடன் இவர் பேச ஆரம்பித்திருப்பதால் இவருக்கு ஏராளமான நிகழ்ச்சிகள் வந்த வண்ணம் உள்ளன.

மருத்துவர்கள் அறிவுரை
மருத்துவர்கள் அறிவுரைப்படி பயணங்களை தவிர்க்க வேண்டியிருப்பதால் வெளியூர்களுக்கு இவர் சுற்றுப்பயணம் செல்வது சாத்தியமா என்பது தெரியவில்லை. நாஞ்சில் சம்பத் உடல் நலமில்லாமல் இருந்த போது இவரது மகனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications