சுவாதி கொலை... நெல்லை மருத்துவமனையில் ராம்குமாரிடம் நீதிபதி விசாரணை
நெல்லை: நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுவாதி கொலையாளி ராம்குமாரிடம் அம்மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் நேரில் விசாரணை நடத்தினார்.
கடந்த மாதம் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் ஊழியர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் நடந்து எட்டு நாட்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் இரவு செங்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தில் சுவாதி கொலையாளி ராம்குமார் கைது செய்யப்பட்டார்.

போலீசார் சுற்றிவளைத்ததும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார் ராம்குமார். அதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொண்டையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் அவரால் பேச முடியவில்லை எனக் கூறப்படுகிறது. விரைவில் அவரை சென்னை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ராம்குமாரிடம் நெல்லை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் நேரில் விசாரணை நடத்தியுள்ளார். இந்த விசாரணையின்போது ராம்குமார் மீது தொடரப்பட்டுள்ள தற்கொலை முயற்சி வழக்கையும், அவரை சென்னைக்கு அழைத்துச் செல்வதற்கான அனுமதி கோரி சென்னை போலீஸார் தாக்கல் செய்துள்ள மனுவையும் நீதிபதி விசாரித்தார்.












Click it and Unblock the Notifications