சென்னையில் பஸ்களின் தடம் எண் மாற்றம்.... பயணிகள் வரவேற்பு!
சென்னை: சென்னையில் ஒரே மார்க்கத்தில் இயக்கப்படும் பேருந்துகளை, பயணிகள் எளிதாக அடையாளம் காணும் வகையில், அவற்றின் தடம் எண்கள் மாற்றப்பட்டு உள்ளன.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 806 வழித்தடங்களில் 3575 பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கும், மாநகர பேருந்து சேவை விரிவாக்கம் செய்யப்பட்டதையடுத்து பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
பிராட்வேயில் இருந்து புறநகர் பகுதிகளான கேளம்பாக்கம், சிறுசேரி, கண்ணகிநகர், எஸ்.சி.பி, செம்மஞ்சேரி எஸ்.சி.பி, ஒட்டியம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு 4 தடம் எண்களில் இதுவரை பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்த வழித்தடங்கள் 21 ஹெச், ஹெச்.21, டி.21, சி.21 என முன்பு இருந்தது. இதனால் பயணிகள் குழப்பம் அடைந்தனர். தங்கள் பகுதிக்கு 21 எச் போகுமா?, எச்.21 போகுமா என குழப்பம் அடைந்தனர். இந்த குழப்பத்தை போக்குவதற்காக ஒரே மார்க்கமாக செல்லும் பேருந்துகளின் எண்கள் ஒரே தடம் எண்ணாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கேளம்பாக்கம் 102
கேளம்பாக்கம் மார்க்கமாக செல்லக்கூடிய அனைத்து பஸ்களுக்கும் தடம் எண்.102 பொதுவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வழியாக மற்ற பகுதிகளுக்கு செல்லும் ஒவ்வொரு பஸ்சிற்கும் 102 சி, 102 கே, 102 எம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரே சீரியல் எண்ணில் ஏ, பி, சி, எம் என பல்வேறு வழித்தடங்கள் தற்போது பிரிக்கப்பட்டுள்ளது. இது பொது மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தாது.

கோயம்பேடு டூ திருநின்றவூர்
இதே போல கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து பட்டாபிராம், திருநின்றவூர், பாண்டூர், மேப்பூர், பேரம்பாக்கம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு சென்ற பேருந்துகளுக்கு பல்வேறு வழித்தடம் எண்கள் முன்பு வழங்கப்பட்டு இருந்தன.
இந்த பகுதிக்கு 153 என்ற பொதுவான தடம் எண்ணும், இந்த வழியாக செல்லக்கூடிய மற்ற பேருந்துகளுக்கு 153 ஏ, 153 பி, 153 கே, 153 டி என தடம் எண் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிராட்வேயில் இருந்து
பிராட்வே-அய்யப்பன் தாங்கல் தடம் எண் 17 எம் தற்போது 26 என மாற்றப்பட்டுள்ளது. இந்த மார்க்கமாக வடபழனி செல்லும் பேருந்துக்கு 26 கட் எனவும், சாலிகிராமம் செல்லும் பஸ்சிற்கு 26 எக்ஸ்டன் எனவும் மாற்றப்பட்டுள்ளது.
மாநகர பேருந்துகளின் தடம் எண் மாற்றப்பட்டது பொது மக்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மாற்றம் குறித்த விவரங்கள் அந்தந்த பேருந்து நிலையங்களில் அறிவிப்பு பலகையாக வைக்கப்பட்டுள்ளன. பிராட்வே, கோயம்பேடு, தாம்பரம், வடபழனி, ஆவடி, திருவள்ளூர், கேளம்பாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளன.

பழசுக்கு புதுசு
மாற்றப்பட்ட புதிய தடம் எண், பழைய தடம் எண் ஆகிய இரண்டையும் பேருந்தின் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும், குழப்பம் உள்ள வழித்தடம் எண்கள் எவை என கண்டறியப்பட்டு அவற்றை மாற்றும் நடவடிக்கையில் போக்குவரத்து கழக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications