நான்கு மணிநேரம் நீலகிரியினை ஆட்டிவைத்த அடைமழை – மீட்புப் பணிகள் தீவிரம்
குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழை அதிகாலை 4 மணி வரை நீடித்தது.
4 மணி நேரத்தில் 88 மில்லி மீட்டர் கனமழை கொட்டியது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக காட்டாற்று வெள்ளம் கிருஷ்ணாபுரம் பகுதிக்குள் புகுந்தது.

இதன் காரணமாக தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் என 36 வாகனங்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர், குன்னூர் நகராட்சி ஊழியர்கள், வருவாய்த் துறை ஊழியர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்ற மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றினார்கள். கனமழை காரணமாக குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஆங்காங்கே மண் சரிவும் ஏற்பட்டது. நேற்று மாலை வரை மீட்பு பணி தீவிரமாக நடைபெற்றது.
இருட்டத்தொடங்கியதால் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன. இன்று 2 ஆவது நாளாக காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட வாகனங்களை தேடும் பணியும், மீட்பு பணியும் தொடங்கியது.
இதுவரை 2 கார், ஒரு ஆட்டோ, ஒரு மோட்டார் சைக்கிள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட வாகனங்கள் எத்தனை என்பதை துல்லியமாக அறிய கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது.
சாலையில் மண் சரிவுகள் அகற்றப்படுகிறது. மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு வாகனங்கள் அனைத்தும் மீட்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications