ஆரத்தி எடுக்க பணம் கொடுத்தால் வழக்கு நிச்சயம் - ராஜேஷ் லக்கானி எச்சரிக்கை
சென்னை: சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் வாக்கு சேகரிக்க செல்லும்போது ஆரத்தி எடுப்பதற்கு பணம் கொடுத்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி எச்சரித்துள்ளார்.
மேலும், விருதுநகர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இதுபோன்று பணம் அளித்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தில்லியில் தேர்தல் ஆணையர்களுடன் ஆலோசனை நடத்திய ராஜேஷ் லக்கானி சென்னைக்கு திரும்பினார்.

இதையடுத்து தலைமைச் செயலகத்தில் அவர் நேற்று அளித்த பேட்டியில், "வாக்கு சேகரிக்கச் செல்லும் வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுக்கப்படுகிறது. அவ்வாறு எடுக்கும்போது ஆரத்தி தட்டில் பணம் வைத்தால் அதுவும் வாக்காளர்களை லஞ்சத்துக்கு உள்படுத்துவது போலாகும்.
எனவே, அதுபோன்று ஆரத்தி எடுக்கும்போது பணம் வைத்தால் அது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு வழக்கு தொடரப்படும்.
இந்தப் பிரச்னை தொடர்பாக ஏற்கெனவே விருதுநகர், ஈரோடு ஆகிய இடங்களில் பணம் கொடுத்தவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சென்னை ராயபுரத்தில் வந்த புகார் குறித்து விசாரணை நடத்த மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications