நீட் தேர்வு: கல்லாகட்டும் கோச்சிங் மையங்கள்! வஞ்சிக்கப்படும் அரசுப்பள்ளி மாணவர்கள்: Oneindia Exposes

Subscribe to Oneindia Tamil

நீட் தேர்வுக்கான எதிர்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நீட் தேர்வு ஏன் வேண்டாம் என்பதற்கு எத்தனையோ புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நீட் தேர்வு வருகைக்கு பிறகு, மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் தொடர்ந்து குறைந்து வருகிறது என்ற அதிர்ச்சியூட்டும் ஆர்டிஐ தகவல் வெளியாகியுள்ளது.

2021-2022, 2022-2023, 2023-2024 கல்வி ஆண்டுகளில் அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் எத்தனை பேருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. நீட் தேர்வில் முதல், இரண்டாம், மூன்றாம் முறை முயற்சிகளில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் ஆகியவை குறித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் வே.ஈஸ்வரன் தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் பெற்றிருந்தார். அதில், முதல்முறை நீட் தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரிக்குச் செல்கின்ற அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் தொடர்ந்து குறைந்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

neet students

2021 - 2022 கல்வியாண்டில் முதல்முறை நீட் தேர்வு எழுதிய 158 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், 2022-2023 ஆம் ஆண்டில் முதல் முறை தேர்வு எழுதிய 84 மாணவர்கள் மட்டும்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து 2023-2024 ஆம் ஆண்டில் முதல்முறை தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரிக்குச் சென்ற மாணவர்களின் எண்ணிக்கை 25 ஆக குறைந்துள்ளது. தனியார் பள்ளி மாணவர்களில், கடந்த 2021-2022 இல் முதல்முறை நீட் தேர்வு எழுதி 1,052 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்கு சென்றுள்ளனர். இதுவே 2023- 2024 கல்வியாண்டில் 1,260 பேர் என தொடர்ந்து அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

தனியார் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 வகுப்புக்கு முன்பே, நீட் கோச்சிங் சென்டர்களுக்குச் சென்று படித்து வருவதால் அவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல், மூன்று அல்லது மூன்று முறைக்கு மேல் நீட் தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரிக்குச் சேருகின்ற மாணவர்களிலும், தனியார் பள்ளி மாணவர்கள்தான் அதிகமாக இருக்கின்றனர். அதேபோல, அரசுப் பள்ளி மாணவர்களில் மூன்று முறைக்கு மேல் தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரிக்குச் சென்ற மாணவர்களின் எண்ணிக்கையும் மிக மிக குறைவாகவே உள்ளது.

இதுகுறித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது: இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 24 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். இதில், 12 லட்சம் பேர் கோச்சிங் சென்டர்களில் படிக்கிறார்கள். ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை நான்காண்டுகள் கோச்சிங் சென்டர்களில் சேர்ந்து பணம் கட்டுகிறார்கள். இதுமட்டுமல்லாமல் பிளஸ்2 வகுப்பு முடிந்த பின்பு நீட் தேர்வை மீண்டும் எழுத மூன்றாண்டுகளுக்கு மேல் கோச்சிங் சென்டர்களுக்கு சென்று பணம் கட்டுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் சுமார் 60 லட்சம் பேர் நீட் கோச்சிங் சென்டர்களில் பணம் கட்டி படித்து வருகிறார்கள்.

இதுபோன்ற தனியார் கோச்சிங் சென்டர்களில் ஒரு வருடத்திற்கு சராசரியாக ரூ. 4 லட்சம் - 7 லட்சம் வரையும் கட்டணம் வாங்குகிறார்கள். சராசரியாக 2 லட்ச ரூபாய் வசூலிக்கப்படுகிறது என்று கணக்கு வைத்துக் கொண்டாலும், ஒரு ஆண்டில் 60 லட்சம் மாணவர்களுக்கு ஒரு லட்சம் கோடிக்கு மேல் கோச்சிங் சென்டர்களில் பணம் வசூல் செய்யப்படுகிறது.

ஒரு லட்சம் பேர் மருத்துவம் படிப்பதற்கு, 24 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். ஒரு லட்சம் பேரை மருத்துவம் படிக்க வைப்பதற்கு ஆகின்ற செலவைவிட 24 லட்சம் பேருக்கான கோச்சிங் கட்டண செலவு அதிகமாக உள்ளது. கோச்சிங் சென்டர்களுக்கு கொடுக்கின்ற பணத்தில் நூற்றுக்கணக்கான மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கிவிட முடியும். மருத்துவக் கல்லூரி தொழிலைவிட கோச்சிங் சென்டர் தொழில் பிரம்மாண்டமாக வளர்ந்து வருகிறது.

தமிழ்நாடு அரசு கொண்டு வந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் காரணமாக மட்டும்தான் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளுக்குச் செல்ல முடிகிறது என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

ஏனெனில் அரசுப் பள்ளி இட ஒதுக்கீட்டு எண்ணிக்கையைத் தவிர அதிகமான மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேரவில்லை. இந்த வாய்ப்பும் தமிழ்நாடு அரசு உருவாக்கிய சட்டத்தின் மூலமாக வந்ததே ஒழிய நீட் தேர்வால் வந்தது இல்லை. ஏனெனில் இந்தியாவில் தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் இந்த ஒதுக்கீடு இல்லை. இந்த வாய்ப்பு நீட் தேர்வால் வந்திருக்கும் எனில் அனைத்து மாநில அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கும்.

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட்டாலும் இந்த இட ஒதுக்கீடு உண்டு. ஒருமுறை நீட் தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரிக்கு செல்கின்ற அரசு பள்ளி மாணவர்களுடைய எண்ணிக்கை மிகமிக குறைவாக உள்ளது.

அதேபோல, மூன்று முறைக்கு மேல் தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. ஆனால், இதற்கு மாறாக தனியார் பள்ளி மாணவர்களின் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களால் கோச்சிங் சென்டர்களுக்கு சென்று படிப்பது என்பது இயலாத காரியம். நீட் தேர்வு என்பது கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிப்பதற்கான ஒரு மிகப்பெரிய தொழிலாக மாறிவிட்டது என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலில் அப்பட்டமாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து, மருத்துவம் படிப்பதற்கான எண்ணிக்கை குறைந்து வருவதன் மூலம் எதிர்காலத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவர்களாக வேண்டும் என்ற கனவு சிதைக்கப்படும் சூழல் உருவாகும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+