ஏற்காடு இடைத்தேர்தல்: ஜீப்பில் கடத்திய ரூ. 5 லட்சம் பறிமுதல்

டிசம்பர் 4-ந்தேதி ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தொகுதி முழுவதும் 13 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஏற்காடு தொகுதிக்குள் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் அதற்கு முறையான ஆவணம் வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் அந்தபணம் பறிமுதல் செய்யப்பட்டு வருமான வரிதுறையினரிடம் ஒப்படைக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான மகரபூசணம் எச்சரித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் விடிய விடிய தொகுதியில் வலம் வந்து சோதனை நடத்தி வருகிறார்கள். இன்று காலை 11.10 மணி அளவில் ஏற்காடு போலீஸ் சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது ஒரு ஜீப் வந்தது. அதை போலீசார் மடக்கி சோதனையிட்டனர். அதில் ரூ.5 லட்சத்து 15 ஆயிரத்தை 850 பணம் இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து காரில் இருந்த டிரைவர் குமார், சுரேஷ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் பணத்திற்கான ஆவணத்தை கேட்டனர். அப்போது அவர்கள் ஏற்காட்டில் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க கொண்டு செல்வதாக கூறினர்.
இதையடுத்து சோதனை மேற்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் அய்யந்துரை, போலீஸ்காரர் இளங்கோ ஆகியோர் ஏற்காடு தாலுகா பறக்கும் படை அதிகாரி ராஜனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது பணம் கொண்டு வந்ததற்கு முறையான ஆவணம் இல்லாததால் பணத்தையும், ஜீப்பையும் பறிமுதல் செய்தார்.
இது தொடர்பாக மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரும், ஏற்காடு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சபாபதி விசாரணை மேற்கொண்டுள்ளார்.
காரில் இருந்தவர்களில் சுரேஷ் அந்த நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றி வருகிறார். அவர் பணத்திற்கு முறையான ஆவணம் கொண்டுவருவதாக தெரிவித்தார்.
விசாரணையில் சரியான ஆவணங்களை தாக்கல் செய்தால் பணம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். இல்லை என்றால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஜீப் வருமான வரிதுறையினரிடம் ஒப்படைக்கப்படும்.
வியாழக்கிழமையன்று ஏற்காடு தொகுதிக்கு உள்பட்ட ஆச்சாங் குட்டப்பட்டியில் காரில் கொண்டு வந்த ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் பணம் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications