மானமும், கட்சியும் தான் பெரிது என்பதை எம்எல்ஏக்கள் உணர வேண்டும்... ஓம் சக்தி சேகர் பொளேர்!
மானமும் கட்சியும் தான் பெரிது என்பதை உணர்ந்து எம்எல்எக்கள் மனம் மாறி தினகரன் பிடியில் இருந்து விலகி வர வேண்டும் என்று புதுச்சேரி அதிமுகவின் ஓம்சக்தி சேகர் கூறியுள்ளார்.
புதுச்சேரி : சசிகலா, தினகரனுக்குத் தான் தங்களது எதிர்ப்பு என்றும், எம்எல்ஏக்களை தாங்கள் எதிர்க்கவில்லை என்றும் புதுச்சேரி மாநில அதிமுகவைச் சேர்ந்த ஓம்சக்தி சேகர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி தி விண்ட் ஃப்ளவர் ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் விடுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான ஓம்சக்தி சேகர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் தினகரனின் கொடும்பாவிகளை எரித்ததோடு சசிகலா தினகரன் குடும்பத்திற்கு எதிராக கோஷங்களை வெளியிட்டனர்.

இதற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓம் சக்தி சேகர் கூறியதாவது: இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களுக்கு எதிராக நாங்கள் போராடவில்லை, சசிகலா தினகரன் மாஃபியா கும்பலுக்கு எதிராகவே போராடுகிறோம். ஜெயலலிதா வழியில் கட்சியையும் ஆட்சியையும் சிறப்பாக வழி நடத்தி செல்லும் ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு உறுதுணையாக இருக்க விடுதியில் இருந்து அவர்கள் வெளியேற வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.
ரெசார்ட்டில் உள்ள சிலரிடம் நாங்கள் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வருகிறோம். அவர்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விரைவில் அவர்கள் நிச்சயம் தாய்க்கழகத்திற்கு திரும்புவார்கள். பணம் கொடுத்துத் தான் எம்எல்ஏக்களை இங்கு தினகரன் தங்க வைத்துள்ளார். எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள எம்எல்ஏக்கள் பெயரை கூறிவிட்டால் அவர்களிடம் கூடுதல் பேரம் பேசி பணம் கொடுக்கவும் தினகரன் தயங்க மாட்டார்.
கட்சியும் மானமும் தான் பெரியது என்பதை உணர்ந்து எம்எல்ஏக்கள் வெளியே வர வேண்டும். நிச்சயம் என்னுடைய பேச்சைக் கேட்டு அவர்கள் மனம் மாறும், அவர்களின் வருகைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். ரெசார்ட்டில் எம்எல்ஏக்கள் தங்கியுள்ளதால் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே இவர்களை வெளியேற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடமும், காவல்துறை இயக்குனரிடமும் மனு அளிக்க உள்ளோம், என்று அவர் பேசினார்.சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் ஓம் சக்தி சேகர், அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்து செயல்பட்டு வந்தவர் ஓம் சக்தி சேகர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications