சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி
சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மருந்துக் கலவை அறை இடிந்து தரைமட்டமானது. இதில், தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
சிவகாசி-சாத்தூர் சாலையில் அனுப்பன்குளம் கிராமத்தில் ஆறுமுகச்சாமி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில், 60க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பணி புரிகின்றனர்; 50க்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தி அறைகள் உள்ளன.

இந்த ஆலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் வேலை முடிந்து அறைகளை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். மருந்துக் கலவை அறையில் அய்யம்பட்டியைச் சேர்ந்த பாண்டி (38) மற்றும் ராமசாமி ஆகியோர் சுத்தம் செய்தனர். ராமசாமி அறையை விட்டு வெளியே வந்தபோது திடீரென மருந்துக்கலவை அறையில் வெடிவிபத்து ஏற்பட்டது.
அந்த அறை முற்றிலும் இடிந்து தரை மட்டமானது. இடிபாடுகளில் சிக்கிய பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த சிவகாசி தீயணைப்புப் படை அலுவலர் முருகன் தலைமையிலான வீரர்கள் பாண்டியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
மருந்துக் கலவை அறையில் உராய்வால் வெடி விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். சம்பவ இடத்தை விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன், சிவகாசி வட்டாட்சியர் பாஸ்கரன் ஆகியோர் பார்வையிட்டனர். இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
