குடிமகன்களே உஷார்.. கடலூரில் போலி மது குடித்த ஒருவர் பலி
கடலூர் அருகே போலி மது குடித்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர்: கடலூர் அருகே கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்ட மதுவை வாங்கி குடித்த ஒருவர் பரிதாபமாக பலியாகிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலையோரம் இருந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. இருப்பினும் மூடப்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளை மாற்று இடத்தில் அமைப்பதற்கான பணியில் டாஸ்மாக் நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதற்கு பொதுமக்கள், பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் புதிய கடைகளை திறக்க முடியாமல் டாஸ்மாக் நிர்வாகம் திணறி வருகிறது. இதனால் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
போலி மதுபானங்களில் 'பிராண்டட்' கம்பெனிகளின் ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்யப்படுகிறது தெரியவந்துள்ளது. குடித்தே தீர வேண்டும் என்பவர்கள், போலி மதுபானம் எனக் கூட தெரியாமல் கூடுதல் விலை கொடுத்து வாங்கி குடிக்கின்றனர். போலி மதுவை அருந்தும் குடிமகன்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது
இந்நிலையில் கடலூர் மாவட்டம் சுத்துகுளம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். இவர் அந்த பகுதியில் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்ட மதுவை வாங்கி குடித்துள்ளார். வாங்கி குடித்த சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யும் கும்பலை தேடி வருகின்றனர். கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்ட மதுவை வாங்கி குடித்தவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications