ஆர்கே நகரில் சிம்லா முத்துசோழனை திமுக நிறுத்தினால்.... அலாரம் அடிக்கும் ஒன் இந்தியா வாசகர்கள்
ஆர்கே நகர் தொகுதியில் சிம்லா முத்துசோழனை மீண்டும் திமுக நிறுத்தினால் 2-வது இடம்தான் கிடைக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர் ஒன் இந்தியா தமிழ் வாசகர்கள்.
சென்னை: ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளராக மீண்டும் சிம்லா முத்துசோழனை நிறுத்தினால் வெல்ல முடியாது என ஒன் இந்தியா கருத்து கணிப்பில் வாசகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக நிறுத்தப் போகும் வேட்பாளர் யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட சிம்லா முத்து சோழன் மீண்டும் விருப்ப மனு கொடுத்துள்ளார்.

எஸ்பி சற்குணம் மருமகள்
மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சற்குணத்தின் மருமகள் என்ற ஒரே காரணத்துக்காக இவருக்கு கடந்த முறை சீட் கொடுக்கப்பட்டது. கடந்த தேர்தலில் தேர்தலில் ஆர்.கே.நகரில் ஜெயலலிதா 97,218 வாக்குகள் பெற்றார்.

நெருக்கடி கொடுத்திருக்கலாம்
திமுகவின் சிம்லா முத்துசோழன் 57,673 வாக்குகளைத்தான் பெற்றார். மொத்தம் 39, 545 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக தோல்வியைத் தழுவியது. திமுக தொண்டர்களுக்கு பரிச்சயமே இல்லாம சிம்லா முத்துசோழனுக்கு பதிலாக சேகர் பாபு போன்றவர்களை வேட்பாளர்களை நிறுத்தியிருந்தால் ஜெயலலிதாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்திருக்க முடியும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.

வலிமையான வேட்பாளர்
தற்போது ஜெயலலிதா மறைந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. அதுவும் அதிமுகவுக்கு வாக்குகளை அள்ளித் தரக்கூடிய இரட்டை இலை சின்னம் இத்தேர்தலில் முடக்கப்படும் நிலை இருக்கிறது. இதனால் திமுக வலிமையான வேட்பாளரை நிறுத்தினால் வெல்ல முடியும் என்கிற நிலைமை இருக்கிறது.

சிம்லாவுக்கு 2-வது இடமே
இந்த நிலையில் திமுகவின் சிம்லா முத்துசோழன் மீண்டும் ஆர்.கே.நகரில் போட்டியிட்டால் 2-வது இடம்தான் கிடைக்கும் என நமது ஒன் இந்தியா தமிழ் கருத்து கணிப்பில் வாசகர்கள் தெரிவித்துள்ளனர்.

27.03% ஆதரவு
மொத்தம் 10,052 பேர் பங்கேற்ற கருத்து கணிப்பில் 2,717 பேர் மட்டுமே அதாவது 27.03% பேர்தான் சிம்லா முத்து சோழனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சிம்லா முத்துசோழனை நிறுத்தினால் தோற்பது உறுதி என திமுகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் ஒன் இந்தியா தமிழ் வாசகர்கள்.


Click it and Unblock the Notifications
