ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு குட்நியூஸ்..5 நாட்களுக்கு பிறகு மீண்டும் மலை ரயில் சேவை தொடக்கம்
உதகை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல, நீலகிரியிலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. மழை காரணமாக நீலகிரி மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் கடந்த 5 நாட்களாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், 5 நாட்களுக்குப் பிறகு மலை ரயில் சேவை மீண்டும் இன்று தொடங்கியுள்ளது.
யுனேஸ்கோவால் உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலில் பயணிப்பதற்காக பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்த மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினமும் காலை 7.10 மணிக்கு இயக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, விடுமுறை நாட்களில் காலை 9.10 மணிக்கும் ஒரு சிறப்பு மலை ரயிலும் இயக்கப்படுகிறது.

இயற்கைக் காட்சிகள், அருவிகள், குகைகள் என எழில் கொஞ்சும் இந்தப் பாதையில் மலை ரயிலில் பயணிக்கும் சுகம் அலாதியானது என்பதால் ஊட்டி செல்லும் சுற்றுலாப் பயணிகளின் விருப்ப பட்டியலில் கட்டாயமாக மலை ரயில் இடம்பிடித்திருக்கும். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரியில் பலத்த மழை பெய்து வந்தது. இதனால் மலை ரயில் பாதையில் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது.
கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. கனமழை, மண் சரிவு காரணமாக கடந்த 5 நாட்களாக மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து மழை பெய்து ரயில் பாதைகளில் பாறைகள் விழுந்துள்ளதால், மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.
இதனால், ஏற்கனவே முன்பதிவு செய்து மலை ரயிலில் பயணிக்க காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். மலை மீது செல்லும் தண்டவாளத்தில் சரிந்து கிடக்கும் மண் சரிவுகளை அப்புறப்படுத்தும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் பாதையில் மண் மற்றும் பாறைகளை அகற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன.
இதைத்தொடர்ந்து, கடந்த 5 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த மலை ரயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications